Published : 26 Sep 2020 05:43 PM
Last Updated : 26 Sep 2020 05:43 PM

ஒரு நாளைக்கு 65 பிரசவங்கள் கூட நடக்கின்றன: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அதிகரித்த பிரசவங்கள்- கரோனா வார்டில் 250 கர்ப்பிணிகளுக்கு ‘குவா.. குவா’

மதுரை 

மதுரை அரசு மருத்துவமனையில், கரோனாவுக்கு முன் மாதந்தோறும் 1,000 முதல் 1,200 பிரசவங்கள் நடந்தன. தற்போது 1,600-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடக்கின்றன. அதிலும், இதுவரை கரோனா பாதித்த 500 கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் இன்னும் ஓயவில்லை. இந்த நெருக்கடியான காலக்கட்டத்திலும் கர்ப்பிணிப் பெண்கள் மாதாந்திர பரிசோதனை, ஸ்கேன் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு மருத்துவமனைக்கு கட்டாயம் செல்ல வேண்டியிருக்கிறது.

தனியார் மருத்துவமனைகள் தற்போதும் ‘கரோனா’ பாதித்த கர்ப்பிணிப் பெண்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு தயங்குகின்றன. ஆனால், அரசு மருத்துவமனைகளில் மட்டுமே மகப்பேறு சிகிச்சை மட்டுமில்லாது அனைத்து உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகளும் தடைபடாமல் நடக்கிறது.

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதற்காக மருத்துவசேவை தடைபடாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை நடக்கின்றன.

அதனால், கர்ப்பிணி பெண்கள் மகப்பேறு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளை நம்பியிருக்க வேண்டிய உள்ளது.

தென் தமிழகத்தில் ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் ‘கரோனா’ வார்டு சிகிச்சை இருந்தாலும் ‘கரோனா’வால் பாதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்கள் மட்டுமில்லாது சிக்கலான பிரசவத்திற்கும் கர்ப்பிணிப் பெண்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கே பெரும்பாலும் பரிந்துரை செய்யப்படுகின்றனர். அதனால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரசவங்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

கரோனாவுக்கு முன் மாதந்தோறும் 1,000 முதல் 1,200 பிரசவங்கள் நடந்தன. தற்போது 1,600-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடக்கின்றன. அதிலும், இதுவரை கரோனா பாதித்த 500 கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

அதில், 250 கர்ப்பிணிகளுக்கு மருத்துவக்குழுவினர் பிரவசம் பார்த்துள்ளனர். ஒரு உயிரிழப்பு கூட இல்லாமல் தாயையும், சேயையும் மகப்பேறு மருத்துவக்குழுவினர் காப்பாற்றி சாதனைப்படைத்துள்ளனர்.

இதுகுறித்து டீன் சங்குமணி கூறுகையில், ‘‘கடைசி நேரத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு, அதனால் சிகிச்சை தாமதமாகுவதை தடுக்க பிரசவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன் கரோனா பரிசோதனை செய்வதை மருத்துவத்துறை கர்ப்பிணி பெண்களுக்கு கட்டாயமாக்கியுள்ளது.

அதனால், கரோனா இருந்தால் மருத்துவர்கள் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மகப்பேறு சிகிச்சைகள் மேற்காள்கின்றனர். இந்த நடைமுறையால் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் பிரசவங்கள் எண்ணிக்கை சத்தமில்லாமல் அதிகரித்துள்ளது, ’’ என்றார்.

மகப்பேறு அறுவை சிகிச்சைத்துறை தலைவர் சுமதி கூறுகையில், ‘‘கரோனாவுக்கு முன் மதுரை அரசு மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 40 முதல் 45 பிரசவங்கள் நடக்கும். தற்போது கூடுதலாக 20 முதல் 30 பிரவசங்கள் அதிகரித்துள்ளன. சில நாட்களில் ஒரு நாளைக்கு 24 மணி நேரத்தில் 65 பிரசவங்கள் கூட நடந்துள்ளது.

இந்த தொற்று பரவும் நேரத்திலும் மகப்பேறு துறையில் முடிந்தளவு யாரும் விடுமுறை எடுக்காமல் மகப்பேறு சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறோம்.

கரோனாவால் பாதித்த கர்ப்பிணி பெண்களுக்கும், மற்ற கர்ப்பிணிகளுக்கும் நிற்கக்கூட நேரமில்லாமல் மகப்பேறு சிகிச்சை மற்றும் பிரசவம் அளித்ததை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x