

ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணியில் இருந்து நீக்கும் பிஎஸ்என்எல் நிர்வாகத்தின் முடிவைக் கண்டித்து தூத்துக்குடியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.ஜெயமுருகன் தலைமை வகித்தார்.
போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளரும், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவருமான சி.பன்னீர்செல்வம், தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் இ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை ஒட்டுமொத்தமாக பணியில் இருந்து நீக்கும் முடிவை பிஎஸ்என்எல் நிர்வாகம் கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதில் 20 பெண்கள் உள்ளிட்ட சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். நிறைவாக பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளை செயலாளர் கே.ஹரிராமசந்திரன் நன்றி கூறினார்.