Published : 26 Sep 2020 04:51 PM
Last Updated : 26 Sep 2020 04:51 PM

நெல் கொள்முதல் விலை ஏமாற்றம்: குவிண்டாலுக்கு ரூ.3,000 வேண்டும்; ராமதாஸ் வலியுறுத்தல்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

நெல்லுக்குக் குவிண்டாலுக்கு ரூ.3,000 கொள்முதல் விலை வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (செப். 26) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டில் 2020-21 ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலைகளை அரசு அறிவித்திருக்கிறது. சாதாரண வகை நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.1,918 ஆகவும் சன்ன ரக நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.1,958 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளின் கவலைகளைப் போக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில், அரசு அறிவித்துள்ள நெல் கொள்முதல் விலை விவசாயிகளின் கவலைகளை அதிகரித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் பருவம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் தொடங்கி, அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நிறைவடையும். நடப்பாண்டுக்கான கொள்முதல் பருவம் அடுத்த சில நாட்களில் தொடங்கவிருக்கும் நிலையில், புதிய கொள்முதல் விலைகள் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்த கொள்முதல் விலையில் புரட்சிகரமாக எதுவும் நிகழ்ந்து விடவில்லை.

மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் வழக்கம் போல சன்ன ரக நெல்லுக்குக் குவிண்டாலுக்கு ரூ.70, சாதாரண வகை நெல்லுக்கு ரூ.50 மட்டும் ஊக்கத்தொகை சேர்த்து கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதில் விவசாயிகள் நலன் எதுவும் இல்லை.

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முடிவு செய்த மத்திய அரசு, சாதாரண வகை நெல்லுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை ரூ.1,815-லிருந்து ரூ.53 உயர்த்தப்பட்டு ரூ.1,868 ஆகவும், சன்ன ரக நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.1,835-லிருந்து ரூ.53 உயர்த்தப்பட்டு ரூ.1,888 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அறிவித்தது.

அப்போதே, நெல்லுக்கான கொள்முதல் விலை போதுமானது அல்ல; ஒரு குவிண்டாலுக்குக் குறைந்தது ரூ.3,000 கொள்முதல் விலையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் கூட அதுதான். அந்தக் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்திருக்க வேண்டும்.

ஆனால், அதற்கு மாறாக, எந்த ஆய்வையும் மேற்கொள்ளாமல், எந்திரத்தனமாக நெல்லுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை அரசு நிர்ணயித்திருப்பது உழவர்கள் நலனில் அக்கறை காட்டும் அணுகுமுறையல்ல.

வேளாண் விளைபொருட்களுக்கு அவற்றின் உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்ற எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையைச் செயல்படுத்த வேண்டும் என்பதை தமிழக அரசு கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

நடப்பாண்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கான உற்பத்திச் செலவு ரூ.1,871.32 என மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், 50% லாபம் ரூ.935.66 சேர்த்து, ஒரு குவிண்டால் நெல்லுக்கான கொள்முதல் விலையாக ரூ.2,806.98 நிர்ணயிக்கப்படுவதுதான் நியாயமானதாக இருக்கும்.

நெல்லுக்கான உற்பத்திச் செலவுகளை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்தான் கணக்கிடுகிறது. விவசாயிகளுக்கு 50% லாபம் என்ற எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையில் தமிழக அரசுக்கு உடன்பாடுதான் எனும் நிலையில், விவசாயிகளுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,806 வழங்கப் படுவதுதான் சரியானதாக இருக்கும். இதில் தமிழக அரசுக்கு மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையப் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதாக கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தபோதிலும், உற்பத்திச் செலவு சரியாக கணக்கிடப்படாததால்தான் நடப்பாண்டில் மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை, உற்பத்திச் செலவை விட மிகக் குறைவாக உள்ளது. இது மத்திய அரசு செய்த தவறு என்பதை யாரும் மறுக்கவில்லை. மத்திய அரசு செய்த தவறு என்ற ஒரே காரணத்திற்காக, அந்தத் தவறை மாநில அரசு சரி செய்யாமல் இருப்பது நியாயமல்ல.

நெல்லுக்கான கொள்முதல் விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால், குவிண்டாலுக்கு ரூ.53 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இது 2.88% உயர்வு ஆகும். உலகில் எந்தத் தொழில் பிரிவினருக்கும் இவ்வளவு குறைவாக வருவாய் உயர்வு அறிவிக்கப்படுவதில்லை. விவசாயிகளுக்கு மட்டும்தான் இத்தகைய அநீதி இழைக்கப்படுகிறது.

மத்திய அரசின் இந்தத் தவறை தமிழக அரசுதான் சரி செய்ய வேண்டும். நெல்லுக்குக் கட்டுப்படியாகும் விலையை மத்திய அரசு அறிவிக்கும் வரை, அதில் ஏற்படும் பற்றாக்குறையை மாநில அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையப் பரிந்துரைப்படி ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,806 கொள்முதல் விலையாக வழங்கப்பட வேண்டியுள்ள நிலையில், அறுவடைக்குப் பிந்தைய செலவுகளையும் சேர்த்து, குறைந்தது குவிண்டாலுக்கு ரூ.3,000 கொள்முதல் விலை வழங்க வேண்டும். அது மட்டும்தான் விவசாயிகளின் கவலையைப் போக்கி மகிழ்ச்சியடையச் செய்யும்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x