

தருமபுரி ராமக்காள் ஏரிக்கரையில் சிதிலமடைந்தும், செடிகளால் மூடப்பட்டும் கிடக்கும் நடைபயிற்சி பாதையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையை ஒட்டி அமைந்துள்ள ராமக்காள் ஏரிக்கரையில் பொதுமக்கள் பங்களிப்பு மற்றும் அரசு நிதி என ரூ.1 கோடி மதிப்பில் நடைபயிற்சி பாதை, அதன் பக்கவாட்டில் அழகுதோட்டங்கள் ஆகியவை அமைக்கப்பட்டது. தருமபுரி நகர மக்கள் இறுக்கமான மனநிலையில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவும், ஏரி உள்ளிட்ட பகுதிகளின் இயற்கை அழகை ரசித்தபடி நடைபயிற்சி மேற்கொள்ளவும் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தப் பணிகள் முடிவுற்று நடைபயிற்சி பாதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த பாதையில் காலை, மாலை நேரங்களில் முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சிறுவர், சிறுமியரும் இங்கு வந்து விளையாடுகின்றனர்.
இந்நிலையில் இந்த நடைபயிற்சி பாதை ஆங்காங்கே சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும், பக்கவாட்டில் நடப்பட்ட அழகுச்செடிகளும், புதிதாக முளைத்த வேலிகருவை முட்செடிகளும் இந்த பாதைக்குள் வளர்ந்துள்ளது.
இதுகுறித்து இப்பாதையை தொடர்ந்து பயன்படுத்தி வரும் சிலர் கூறியது:
நடைபயிற்சி பாதையில் பதிக்கப்பட்டுள்ள சிமென்ட் கற்கள் சிதிலமடைந்திருப்பதால் அதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கால்களும் சிக்கி காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி இந்த பாதையை மறைக்கும் வகையில் வளர்ந்துள்ள அழகுச்செடிகளை வெட்டிவிட்டு, முட்செடிகளை அப்புறப்படுத்த வேண்டும். இந்தச் செடிகளில் விஷ பூச்சிகள் பதுங்குவதால் நடைபயிற்சி மேற்கொள்வோர் மற்றும் விளையாடும் குழந்தை களுக்கு ஆபத்து உள்ளது.
இதுதவிர சிலநேரங்களில் சமூக விரோத கும்பல் இந்தப் பகுதியில் மது அருந்திவிட்டு நடைபாதை யிலே பாட்டில்களை உடைத்துச் செல்கின்றனர். நல்ல நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட இந்தப் நடைபயிற்சி பாதை தற்போது இதுபோன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி இருப்பது வேதனை அளிக்கிறது. உடனடியாக இந்தப் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு கூறினர்.