Last Updated : 26 Sep, 2020 02:12 PM

 

Published : 26 Sep 2020 02:12 PM
Last Updated : 26 Sep 2020 02:12 PM

முகாந்திரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் புகாரை தாமதமின்றி விசாரிக்க வேண்டும்: போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

புகாரில் முகாந்திரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் முறையாக விசாரித்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை செல்லூரைச் சேர்ந்த ராஜபிரபு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

எனது எதிர் வீட்டு குடும்பத்தில் ஒருவரின் திருமணத்துக்கு நான் உதவினேன். திருமணம் செய்து கொண்ட இருவரும் பின்னாளில் விவாகரத்து பெற்றனர். இதற்கு நான் தான் காரணம் என்று கருதி பெண் வீட்டினர் என்னிடம் அடிக்கடி தகராறு செய்தனர். ஒரு நாள் நடந்த தகராறில் என்னை கல்லால் தாக்கினர். எனது தலையில் காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக செல்லூர் போலீஸார் சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், இதுவரை முறையாக விசாரிக்கவில்லை. எனவே, நான் தாக்கப்பட்ட வழக்கின் விசாரணையை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி பெறப்படும் புகாரில் முகாந்திரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் புகாரை முறையாக விசாரித்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இதில் எந்த கால தாமதமும் இருக்கக்கூடாது. இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது நியாயமற்றது. எனவே ஒரு மாதத்தில் விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x