Published : 26 Sep 2020 01:51 PM
Last Updated : 26 Sep 2020 01:51 PM

கரோனா குறித்து கடைசி நிகழ்ச்சியில் எச்சரித்த எஸ்பிபி: அடுத்த தலைமுறை குறித்த ஆதங்கப் பதிவு   

சென்னை

எஸ்பிபி கரோனா குறித்து நன்கு அறிந்தே வைத்திருந்தார். அவர் கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பின் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் கரோனா குறித்த தனது அச்சத்தைத் தெரிவித்தார். இயற்கையை நாம் சீண்டியதன் விளைவே இது என எஸ்பிபி பேசியுள்ளார்.

கரோனா எனும் கொடிய வைரஸ் தொற்று ஆரம்பித்த காலத்தில் சாதாரணமாக அதை அலசிச் சென்ற நிகழ்வு நடந்தது. ஊரடங்கின் ஆரம்பக்கட்டத்தில் அதை விமர்சித்தவர்கள், பின்னர் தங்கள் நெருங்கிய சொந்தங்களே பாதிக்கப்பட்டு மரணமடைந்தபோது அதிர்ந்துதான் போயினர்.

மதிப்புமிகு உயிர்கள் கரோனாவால் பலவந்தமாகப் பறிக்கப்பட்டன. ஏழை, பணக்காரர், பிரபலம், அதிகாரமிக்கவர் என யாரும் தப்ப முடியவில்லை. இதிலிருந்து தப்ப ஒரே வழி தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. மகத்தான மனிதர்களும், 24 மணி நேரம் கூட போதாது எனப் பரபரப்பாக இயங்கியவர்களும் 4 சுவர்களுக்குள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டார்கள்.

அதில் ஒருவர் எஸ்பிபி. அவரது குரலுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் 6 மாதங்கள் காத்திருந்து பாடல் பதிவு செய்த அளவுக்கு பிஸியான பிரபலம். எஸ்பிபி கரோனா குறித்து நன்றாக அறிந்திருந்தார். அனைத்து ஊரடங்கு நடைமுறைகளையும் கடைப்பிடித்து வீட்டிலேயே இருந்தார். ஆனால், தளர்வு அறிவிக்கப்பட்டவுடன் அவர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சி அவருக்குத் தொற்று ஏற்பட காரணமாகி இன்று அவர் இல்லை என்கிற நிலை ஆகிவிட்டது.

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ என மூச்சுவிடாமல் பாடிய பாடல் வரியின் இடையே, மண்ணில் இந்தப் பூச்சிகள் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ என அறிவியல் உண்மையை மேடையில் உணர்த்திப் பாடியவர் எஸ்பிபி. கரோனா குறித்த அவரது புரிதல், எச்சரிக்கை மிக நுணுக்கமானது. ஆனால் என்ன செய்வது கடைசியில் அவர் மரணத்துக்கும் அதுவே காரணமாக அமைந்தது.

மேடைக்கச்சேரி ஒன்றில் அவர் கரோனா குறித்துப் பதிவு செய்யும்போது, அதற்கும் காரணம் மனிதன்தான் இயற்கையோடு விளையாடும்போது அது நம்மைச் சோதிக்கிறது என்று பதிவு செய்துள்ளார்.

அநேகமாக எஸ்பிபி கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி அதுவாகத்தான் இருக்கும். அதில் கரோனா தொற்று குறித்து எஸ்பிபி விரிவாகப் பேசியுள்ளார். அந்தக் கச்சேரியில் முகக்கவசத்துடன் பேசும் எஸ்பிபி, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடலைப் பாடும் முன் அந்தப் பாடலை ஏன் தேர்வு செய்தேன் என்று பேசும்போது கரோனா குறித்துப் பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது:

''கரோனா குறித்து தப்பாகப் பேசக்கூடாது. கரோனா கொடுமையானது, ராட்சஸி என்று சொல்ல வேண்டாம். நமக்கு அது சாபம். நாம் செய்த தப்புக்கு அது சாபம். இயற்கையை நாம் நிறைய வஞ்சனை செய்துவிட்டோம். நான் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் சொல்லியிருக்கிறேன். அதற்குக் கொடுக்கவேண்டிய மரியாதையைக் கொடுக்கவில்லை. அது இயற்கைத் தாய்.

நம் பெரியவர்கள் நமக்கு அழகான பூமி, அழகான காற்று, அழகான தண்ணீர் என எல்லாவற்றையும் கொடுத்தார்கள். நாம் அதையெல்லாம் அழித்துவிட்டு ஒரு மயானம் போன்ற, சுடுகாட்டை நமது அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கிறோம். என்ன நியாயம் இது?

அதனால் நடக்கிற பலன் என்னவென்பதை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடலை நான் தேர்வுசெய்து இப்போது பாடப்போவதற்கு அதுதான் காரணம். என் ஆளு, என் சாதி, என் கலர் , என் ஊரு இது சாதாரண மனிதர்கள் பேசுவது. புத்தியுள்ளவர்கள் எல்லோரும் ஒன்றுதான் என்று நினைப்பார்கள்.

நம்மிடம் உள்ளதை மற்றவர்களுக்குப் பகிரலாம், பகிர்ந்துகொள்ள முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் தீமை செய்யாமல் இருக்கலாம். இதுதான் தத்துவம். மக்கள் அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும்''.

இவ்வாறு எஸ்பிபி பேசினார்.

இயற்கையை நேசித்த எஸ்பிபி அடுத்த தலைமுறைக்கு அழகான உலகை நாம் அளிக்கவில்லை என்று ஆதங்கப்பட்டார். இயற்கையை நாம் சோதித்ததால் வந்த சாபம்தான் கரோனா என எச்சரித்தார். எதை எச்சரித்தாரோ அதுவே அவரது மறைவுக்குக் காரணமாக அமைந்தது. அவரது நண்பர் இளையராஜா பதிவு செய்ததுபோல், ‘எல்லாத் துக்கத்துக்கும் ஒரு அளவு இருக்கு. இதற்கு அளவு இல்லை’ என்கிற வார்த்தைகளைக் குறிப்பிடுவதைத் தவிர வேறு பொருத்தமான வார்த்தைகள் இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x