Published : 26 Sep 2020 12:01 PM
Last Updated : 26 Sep 2020 12:01 PM

மியான்மர் நாட்டில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு வைகோ கடிதம்

மியான்மர் நாட்டில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் என, வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வைகோ நேற்று (செப். 25) மின்னஞ்சலில் எழுதிய கடிதம்:

"சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து, கடந்த ஜூலை 23 ஆம் நாள் 9 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களுடைய படகு எண் IND-TN-02 MM 2029.

ரகு, லட்சுமணன், சிவகுமார், பாபு, பார்த்தி, கண்ணன், தேசப்பன், முருகன், எல். தேசப்பன் ஆகியோர் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு மணி நேரத்தில் அவர்களுடைய ஜிபிஎஸ் கருவி பழுதாகிவிட்டது. ஜூலை 28 ஆம் நாள் வரை தொடர்பில் இருந்தனர். ஆகஸ்டு 7 அன்று அவர்கள் கரைக்குத் திரும்பி இருக்க வேண்டும்.

ஆனால், அதன் பிறகு அவர்களிடம் இருந்து எந்தத் தொடர்பும் இல்லை. அதனால் அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் வேதனைக்கு உள்ளாகினர்.

53 நாட்கள் கழித்து செப்டம்பர் 13 அன்று அவர்கள் மியான்மர் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி கிடைத்தது. உற்றார் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களை மீட்பதற்காக இந்திய வெளியுறவுத் துறை முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால், கரோனா முடக்கத்தின் காரணமாக அவர்கள் திரும்பி வர முடியவில்லை.

மியான்மர் கடற்படையினர் அவர்களைத் தங்கள் நாட்டில் தரை இறங்க விடவில்லை. படகிலேயே இருக்கும்படி கூறிவிட்டனர்.

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

எனவே, அவர்கள் பல மாதங்களாக படகிலேயே இருக்கின்றனர். இதற்கு இடையில் 'பாபு என்ற மீனவரை ஏதோ பழுதுபார்ப்புப் பணிகளுக்காக அனுப்பினோம். ஆனால், அவரைக் காணவில்லை' என்று மியான்மர் கடற்படையினர் கூறுகின்றனர்.

அவர் படகுக்குத் திரும்பி வரவில்லை. அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. உயிரோடு இருக்கின்றாரா என்பதும் தெரியவில்லை. தங்கள் பாதுகாப்பில் இருக்கின்ற ஒருவரை மியான்மர் கடற்படையினர் பொறுப்பற்ற முறையில் நடத்தி இருக்கின்றனர். 53 நாட்களாக கடலில் தத்தளித்த போதிலும் உயிருடன் மீண்டு வந்த மீனவர்களுள் ஒருவர் கரையில் இருந்த பொழுது காணாமல் போயிருக்கிறார். அவரது குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்து இருக்கின்றனர்.

இந்தப் பிரச்சினை குறித்து வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருக்கின்றார்.

எனவே, மேலும் தாமதம் இன்றி மீனவர்கள் அனைவரையும் சென்னைக்குப் பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்; அதற்கான முயற்சிகளைத் தாங்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அன்புடன் வேண்டுகின்றேன்".

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x