Published : 26 Sep 2020 11:52 AM
Last Updated : 26 Sep 2020 11:52 AM

சரவண பொய்கையில் இறந்து மிதந்த மீன்கள்: மர்ம நபர்கள் நீரில் ரசாயனம் கலந்திருக்கலாம் என சந்தேகம்

திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் ஏராளமான மீன்கள் இறந்து மிதந்தன.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சரவணப் பொய்கை குளம் மலையை ஒட்டி உள்ளது. சமீப காலமாக முறையாகப் பராமரிக்காததால் பக்தர்கள் உட்பட யாரும் குளத்தில் நீராடுவதைத் தவிர்க்கின்றனர்.இக்குளத்தில் வளர்க்கப்பட்ட மீன்கள் சில, கடந்த 2 நாட்களாக இறந்த நிலையில் நேற்று காலை பல ஆயிரம் மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதால் துர்நாற்றம் வீசியது.

திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ. பா.சரவணன் குளத்தைப் பார்வையிட்டு, கோயில் நிர்வாகி களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிகாரிகளின் நடவடிக்கை இல்லாததால் பல்லாயிரக்கணக்கான மீன்கள் இறந்துள்ளன. நீரில் ரசாயனப் பொருள் கலந்திருப்பதாக தெரிய வருகிறது. இதன் பின்னணியில் இருப்பது யார் என காவல் துறையினர் கண்டறிய வேண்டும். சரவணப் பொய்கையை உடனே தூய்மைப்படுத்த வேண்டும். தவறினால் தொகுதி மேம்பாட்டு நிதியில் தூய்மைப்படுத்தப்படும் என்றார்.

மாநகர் பாஜக தலைவர் கே.கே.சீனிவாசன் தலைமையில் பாஜக.வினர் குளத்தைப் பார்வையிட்டனர். இந்து இளைஞர் முன்னணி சார்பாக மாவட்டச் செயலாளர் செல்லகுமார் தலைமையில் கோயில் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். காவல் ஆய்வாளர் மதனகலா பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x