விளாத்திகுளம் தொகுதியில் 60,000 ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி: முழு வீச்சில் தயாராகும் விவசாயிகள்

மானாவாரி நிலங்களில்  விதைப்பதற்காக புதூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைந்துள்ள உலர்களத்தில் விவசாயிகள் விதை வெங்காயத்தை  காய வைத்துள்ளனர்.
மானாவாரி நிலங்களில் விதைப்பதற்காக புதூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைந்துள்ள உலர்களத்தில் விவசாயிகள் விதை வெங்காயத்தை காய வைத்துள்ளனர்.
Updated on
1 min read

விளாத்திகுளம் தொகுதியில் 60,000 ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிட விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1.70 லட்சம் ஹெக்டேர் மானாவாரி நிலங்களில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், பருத்தி, வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி போன்ற பயிர்கள் ஆண்டுதோறும் பயிரிடப்பட்டு வருகிறது. இதில், விளாத்திகுளம் தொகுதியில் சுமார் 60,000 ஏக்கருக்கு மேற்பட்ட மானாவாரி நிலங்களில் வெங்காயம், மிளகாய் பயிரிடப்படுகிறது.

திருச்சி மாவட்டம் துறையூர், ஓட்டன்சத்திரம் பகுதிகளுக்கு அடுத்து தென்மாவட்டங்களில் விளாத்திகுளம் தொகுதியில் தான் அதிகமாக சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. ஏக்கருக்கு 100 கிலோ முதல் 150 கிலோ வரை விதை வெங்காயம் தேவைப்படுகிறது.

இந்தாண்டு ஒரு கிலோ விதை வெங்காயம் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. ராபி பருவத்தில் பயிர் செய்ய, விதைவெங்காயத்தை விவசாயிகள் வாங்கி தங்களது வீடுகளில் உலரவைத்துள்ளனர். புரட்டாசி 20-ம் தேதிக்கு பின்னர் வெங்காயம் ஊன்றுவதற்கு ஏதுவாக நிலங்களில் ஆட்டுக்கிடை, சாணம் ஆகிய இயற்கை உரங்களை போட்டு, 8 முறைஉழுது பண்படுத்தி வைத்துள்ளனர்.

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் கூறும்போது, ‘‘விளாத்திகுளம் பகுதியில் விளைவிக்கப்படும் வெங்காயத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கேரளா மாநில வியாபாரிகள் விரும்பி வாங்குவர்.

சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயத்தை பதப்படுத்தி வைக்க கிராமங்களில் முறையான கிட்டங்கி வசதி இல்லாததால், சந்தையில் உடனுக்குடன் விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைந்த வெங்காயத்தை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, கிராமங்கள் தோறும் வெங்காயத்தை பதப்படுத்த கிட்டங்கிகள் அமைக்க வேண்டும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in