

காவிரி ஆற்றுப் படுகையில் ஓஎன்ஜிசி சார்பில் ஷெல் காஸ் எடுப்பதற்கான ஆதாரம் உள்ளது என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் நேற்று வாதிட்டனர்.
திருவாரூரைச் சுற்றியுள்ள காவிரி ஆற்றுப் படுகையில் ஓஎன்சிஜி நிறுவனம் மேற்கொண்டு வரும் பணிகளுக்கு தடை விதிக்கக் கோரி தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 2-ம் அமர்வில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்பத்துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்குக்கு உதவி செய்வதற்காக நியமிக்கப்பட்ட மதிமுக பொதுச்செயலர் வைகோ, கடந்த 50 ஆண்டுகளாக, காவிரி ஆற்றுப் படுகையை ஓஎன்ஜிசி சீரழித்துவிட்டது என்று வாதிட்டார்.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் சிவ.ராஜசேகரன், அருள்ராஜ் ஆகியோர் ஆஜராகி, இந்த வழக்கில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்தை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும். காவிரி ஆற்றுப் படுகையில் ஓஎன்ஜிசி சார்பில் ஷெல் காஸ் எடுப்பதற்கான ஆதாரம் உள்ளது. அது தொடர்பான மனுவை அமர்வு முன்பு தாக்கல் செய்ய இருக்கிறோம் என்றனர்.
உடனடியாக தாக்கல் செய்யு மாறு அறிவுறுத்திய அமர்வின் உறுப்பினர்கள், மனு மீதான அடுத்த விசாரணையை அக்டோபர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.