புதுச்சேரியில் கைப்பற்றப்பட்ட 74 சிலைகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

புதுச்சேரியில் நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டு, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கும்பகோணம் சரக அலுவலகத்தில் நேற்று வைக்கப்பட்டிருந்த சிலைகளை பார்வையிடும் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள்.
புதுச்சேரியில் நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டு, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கும்பகோணம் சரக அலுவலகத்தில் நேற்று வைக்கப்பட்டிருந்த சிலைகளை பார்வையிடும் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள்.
Updated on
1 min read

புதுச்சேரியில் கைப்பற்றப்பட்ட 60 உலோகச் சிலைகள் உட்பட 74 சிலைகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் நேற்று ஒப்படைக்கப்பட்டன.

தமிழ்நாட்டிலுள்ள பழமையான கோயில்களிலிருந்து திருடி விற்கப்பட்ட ஏராளமான உலோக, கற்சிலைகள் புதுச்சேரி ரோமன் ரோலண்டு தெருவைச் சேர்ந்த ஜீன் பால் ராஜரத்தினம் என்பவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஜீன் பால் ராஜரத்தினத்தின் வீட்டில் நேற்று முன்தினம் நடத்திய சோதனையில் 60 உலோகச் சிலைகள், 14 கற்சிலைகள் கைப்பற்றப்பட்டன.

இச்சிலைகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து சிலைகளின் உயரம், எடைஆகியவற்றை நீதிபதி முன்னிலையில் ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து 60 உலோகச்சிலைகளை கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் வளாகத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்கவும், மீதமுள்ள 14 கற்சிலைகளை நீதிமன்றத்தில் பாதுகாப்பாக வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி. சக்திவேல் கூறும்போது, "தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவர்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in