

அரசு ஊழியர்களுக்கு மாநில அளவிலான மேசைப்பந்து மற்றும் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகளை தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாநில அரசு ஊழியர்களுக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள், நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கப்பட்டது.
தமிழக அரசு ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், அவர்களை விளையாட்டில் ஈடுபடுத்தி ஊக்குவிக்கும் வகையிலும் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. தடகளம், கூடைப்பந்து, கபாடி, டென்னிஸ், மேசைப்பந்து மற்றும் இறகுப்பந்து போட்டிகள் மாவட்ட அளவில் முன்பே நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, மாநில அளவிலான மேசைப்பந்து மற்றும் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள் நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கிலும், நேரு விளையாட்டு அரங்கிலும் 3 நாட்கள் நடைபெறுகின்றன. இப் போட்டிகளில் தமிழகம் முழுவதிலி ருந்தும் சுமார் 500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
மாவட்ட அளவில் இப்போட்டி களை நடத்த மாவட்டத்துக்கு தலா.ரூ.50 ஆயிரம் வீதம் 32 மாவட்டங்களுக்கு ரூ.16 லட்சமும், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்த ரூ.20 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விழாவில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதன்மைச் செயலர் ஷம்பு கல்லோலிகர், ஆணைய பொது மேலாளர் வி.ஆர்.நியூபிகின் செல்லப்பா, முதுநிலை மேலாளர் வெ.வாள்வீமராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.