Published : 26 Sep 2020 07:35 AM
Last Updated : 26 Sep 2020 07:35 AM

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வேளாண் சட்ட மசோதாக்களை எதிர்த்து விவசாய சங்கங்கள் மறியல்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மத்திய அரசுகொண்டு வந்துள்ள விவசாயம்தொடர்பான 3 சட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மறியல் மற்றும் நகல் எரிப்பு போராட்டங்கள் நடைபெற்றன. இதில் ஈடுபட்ட சுமார் 1,000 பேர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசு அத்தியவாசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்புச் சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்புச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை கொண்டு வந்துள்ளது.

இச்சட்டங்கள் விவசாயி களுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இவற்றை திரும்பப்பெற வலியுறுத்தி மறியல், சட்ட நகல் எரிப்பு போராட்டங்கள் நடைபெற்றன.

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலர் கே.நேரு தலைமையில் நடைபெற்றபோராட்டத்தில் சட்ட நகலை எரித்தது தொடர்பாக 38 பேரும், உத்திரமேரூரில் மோகன் தலைமையில்நடந்த போராட்டத்தில் 28 பேரும்கைதாகினர். மதுராந்தகத்தில் 270, செய்யூரில் 63, செங்கல்பட்டில் 52 பேரும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.

திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலர் பொன்னப்பன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் செல்வம் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒன்றிய தலைவர் லிங்கன் ஆகியோர் மத்திய அரசை கண்டித்து கண்டன உரையாற்றினர்.

இதில், நிர்வாகிகள் அன்பரசு, வெங்கடேசன், நந்தகுமார் உள்ளிட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பினர். சாலை மறியலில் ஈடுபட்ட 38 பேர் கைதாகினர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் சோழவரம் சுங்கச்சாவடி அருகே நடந்த மறியலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலர் சண்முகம் தலைமையில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த 300 பேர் பங்கேற்றனர். இவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல் திருத்தணி புறவழிச் சாலையில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x