

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் வெளியிட்ட அறிக்கை:
இசையுலகின் ஒப்பற்ற நாயகனாக விளங்கிய எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவு இசை உலகில் மட்டுமல்லாது அனைத்து மக்களுக்குமே மிகுந்தவருத்தத்தை அளிக்கக் கூடியது. திரை இசைக்கு அப்பாற்பட்டு ஆன்மிகத்திலும் பற்று கொண்டவராய் விளங்கி வந்தார். பல தெய்வபக்தி பாடல்களும், பலவிதமான ஸ்தோத்திரப் பாடல்களும் மிகச் சிறந்த முறையில் பாடி மக்களிடம் பக்தி மணம் பரப்பியவர்.
காஞ்சி மடத்தின் மீதும் ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகள் மீதும் ஆழ்ந்த பக்தியும், மிகுந்த மரியாதையும் கொண்டு சுவாமிகளின் அபிமானத்துக்கு பாத்திரமாக விளங்கினார்.
அவரை இழந்த வருத்தத்திலிருக்கும் குடும்பத்துக்கு மன அமைதி கிடைக்க வேண்டி மஹாதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீசந்திரமௌலீஸ்வரை பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூர்வீக வீடு தானம்
ஆந்திர மாநிலம், நெல்லூரில் திப்பராஜூவாரி தெருவில் எஸ்பிபி-க்குச் சொந்தமான பூர்வீக இல்லம் உள்ளது. கடந்தபிப். 11-ம் தேதி காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீவிஜயேந்திரரை நெல்லூர் இல்லத்துக்கு வரவழைத்து அந்த வீட்டை காஞ்சிசங்கர மடத்திடம் ஒப்படைத்தார். அப்போது எஸ்பிபியின் தந்தை சாம்பமூர்த்தி எழுதிய நூலை ஸ்ரீவிஜயேந்திரர் வெளியிட்டார்.
அந்நிகழ்ச்சியின்போது பேசியஎஸ்பிபி, “எனது தந்தை வாழ்ந்த வீடு, அவரது பெயரில் வேதபாட சாலையாக மாறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் அவர்இந்த வீட்டில் வாழ்ந்து வருவதாகவே தோன்றுகிறது” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.