Published : 26 Sep 2020 07:12 AM
Last Updated : 26 Sep 2020 07:12 AM

சாதக அம்சங்கள் குறித்து வேளாண் துறை செயலர் விளக்கம்; மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை: அமைச்சர் துரைக்கண்ணு உறுதி

அமைச்சர் துரைக்கண்ணு

சென்னை

மத்திய அரசின் வேளாண்துறை சட்ட மசோதாக்கள் விவசாயிகளுக்கு நன்மை தரக்கூடியவை, அவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு உறுதியளித்துள்ளார்.

மத்திய அரசு அண்மையில் 3 வேளாண் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. தற்போது இந்த மசோதாக்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், நேற்று வேளாண் அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறும்போது, "மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட விளைவிக்கும் பொருட்களை சந்தைப்படுத்துதல், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யும் விவசாயிகள், கொள்முதல் செய்யும் வணிகர்களுக்கான மசோதாக்கள் விவசாயிகளுக்கு நன்மை தரக்கூடியவை. அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது தமிழக அரசின் திட்டவட்டமான முடிவு. தமிழகத்தை பொறுத்தவரை எந்த பாதிப்பும் இல்லை. தேர்தல் நேரம் என்பதால் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன ’’ என்றார்.

ஒப்பந்தச் சட்டம்

தொடர்ந்து, வேளாண் மசோதாக்களின் அம்சங்கள் குறித்து, வேளாண் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி கூறியதாவது:

நாட்டிலேயே தமிழகம்தான் முதன்முதலில் பண்ணை ஒப்பந்தச் சட்டத்தை கடந்த ஆண்டு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் விதிகள்தான், தற்போது மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட பண்ணை ஒப்பந்த உறுதியளிப்பு சட்டத்திலும் உள்ளது.

தமிழக சட்டத்தின்படி, உற்பத்திப் பொருளின் தரம், அளவு, விலையை முடிவெடுத்து, மாநிலஅரசு நியமிக்கும் அதிகாரி முன் விவசாயிகள் தொடர்புடைய வணிகர் அல்லது நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். சிறு விவசாயிகள் விவசாய உற்பத்தியாளர் சங்கம் மூலம் ஒப்பந்தம் செய்யலாம். இதன்மூலம் கொள்முதல் தேதியில் விலை குறைந்திருந்தால் ஒப்பந்த விலைக்கும் அதிகரித்திருந்தால் உயர்வான விலைக்கும் வாங்க வேண்டும்.

ஒப்பந்தப்படி கொடுக்காவிட்டால் சார் ஆட்சியர் மூலம் ஒப்பந்ததாரருக்கு 150 சதவீதம் அபராதம்உட்பட நடவடிக்கை எடுக்கப்படும்.இதன் மூலம் விவசாயிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.

வர்த்தக சட்டம்

வடமாநில விவசாயிகள் தங்கள் விளை பொருட்களைஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மட்டுமே விற்க முடியும். ஆனால், தமிழக விவசாயிகள்ஒழுங்கு முறை விற்பனைக் கூடம், சந்தைக்கு வெளியில் அல்லது தமிழ்நாடு உணவுப் பொருள்வழங்கல் துறைக்கு என 3 வகைகளில் விற்கலாம்.

வெளிச்சந்தையில் கிடைக்கும் விளைபொருளை வாங்கும் வணிகர்கள், தற்போதைய விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தக சட்டத்தின்படி, சந்தை கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இதனால் சந்தைக் குழுவுக்கு ரூ.50முதல் ரூ60 கோடி வரை வருவாய் குறையும். அதேநேரம் விவசாயிகள், நுகர்வோருக்கு இந்த தொகை கிடைக்கும்.

அத்தியாவசிய பொருள் சட்டம்

அத்தியாவசிய பொருட்களை குறிப்பிட்ட அளவு மட்டுமே இருப்புவைக்க அனுமதி உள்ளது. ஆனால் தற்போதைய அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டத்தின்மூலம் இருப்புக்கான கட்டுப்பாடுகள் இல்லை. இதன்மூலம் விவசாயிகளை விலை வீழ்ச்சியில் இருந்துகாப்பாற்ற முடியும். இந்த சட்டங்களால் பொதுவிநியோகத்திட்ட பொருட்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x