

குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கான புத்தாக்கப் பயிற்சியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் தொடங்கி வைத்தார்.
குழந்தைகள் தொடர்பான பாதுகாப்புச் சட்டங்களை பின்பற்ற, சென்னையில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும், ஒரு காவல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த காவல் அதிகாரிகளுக்கான புத்தாக்கப் பயிற்சியின் தொடக்க விழா சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ், பயிற்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவின் துணை ஆணையாளர் ஜெயலட்சுமி வரவேற்றுப் பேசினார்.
சென்னை பெருநகர காவல்ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் தொடக்க உரையாற்றினார். சமூக பாதுகாப்பு இயக்குநர் லால்வீனா, குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசினார். கூடுதல் காவல் துறை இயக்குநர் (தலைமையிடம்) சீமா அகர்வால் வாழ்த்துரை வழங்கினார்.
இவ்விழாவில் காவல் கூடுதல் ஆணையாளர்கள் தினகரன் (தெற்கு), கண்ணன் (போக்குவரத்து), காவல் துணை ஆணையாளர்கள் விமலா மற்றும் தர்பாபு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளர் கயல்விழி உட்பட பலர் கலந்து கொண்டனர். வரும் 29-ம் தேதி வரை 4 நாட்கள் இந்த புத்தாக்கப் பயிற்சி நடக்கிறது.