

பாளையங்கோட்டையிலுள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டுவந்த கரோனா சிகிச்சை மையம் நிறைவுக்கு வந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்குமுன் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
இதனால் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மட்டுமின்றி பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளும் கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது கரோனா பாதிப்பு எண்ணிக்கை மாவட்டத்தில் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 947 பேர் மட்டுமே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் அரசு சித்த மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக செயல்பட்டுவந்த கரோனா சிகிச்சை மையம் நிறைவுக்கு வந்துள்ளது.
இம்மருத்துவமனையில் சித்த மருத்துவ சிகிச்சைக்காக நோயாளிகள் இன்று முதல் அனுமதிக்கப்படுகிறார்கள்.