Published : 25 Sep 2020 06:33 PM
Last Updated : 25 Sep 2020 06:33 PM

மதுரை நகரின் மையப்பகுதியில் சங்ககாலம் முதலே மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உள்ளது: தொல்லியல் ஆய்வாளர் சொ.சாந்தலிங்கம் 

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் முழுவதும் தொல்லியல் ஆய்வாளர் சொ.சாந்தலிங்கம் தலைமையில் குழு அமைத்து கல்வெட்டுகள் வாசிக்கப்பட்டு கோயில் நிர்வாகம் சார்பில் நூலாக விரைவில் வெளியிடப்படவுள்ளன.

இந்ந்நிலையில், இன்று தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் பாண்டி நாட்டு வரலாற்று பேரவை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: உலகப் புகழ் பெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மதுரை நகரின் மையப்பகுதியில் சங்ககாலந்தொட்டே இருந்துவருகிறது.

மதுரைக்காஞ்சி என்னும் சங்க இலக்கியம் ‘மழுவாள் நெடியோன் தலைவன்’ (வரி 455) எனச்சுட்டும் சிவன் உறையும் கோயிலாக இதனை கருதலாம். பக்தி இயக்க காலத்தில் தேவார மூவராலும் பாடப்பெற்ற கோயிலாக திகழ்கிறது. முதலாமவரான திருஞானசம்பந்தர் இக்கோயில் இறைவனை ஆலவாய் அண்ணல், ஆலவாய் நம்பி, ஆலவாயச் சொக்கர் என்று பல பெயர்களில் பாடுகிறார். இப்பெயரே அனைத்து கல்வெட்டுகளிலும் இடம் பெற்றுள்ளது.

இறைவனுக்கு சொக்கநாதர் என்ற பெயர் மதுரை நாயக்கர் ஆட்சிக்காலத்திலும் மீனாட்சி என்ற அம்மையின் பெயர் பாவைவிளக்கில் உள்ள பொறிப்பின் மூலம் கி.பி.1752லேயே வழங்கப்பட்டுள்ளது. மீனாட்சி சுந்தரேசுவரர் என்னும் பெயர் திருவாச்சியில் உள்ள பொறிப்பின் மூலம் கி.பி.1898ம் ஆண்டில்தான் வழங்கியுள்ளது தெரிகிறது.

இங்குள்ள கல்வெட்டுகளை மத்திய அரசின் தொல்லியல்துறை பலவற்றை படித்து வெளியிட்டுள்ளது. தற்போதைய முழுமையான ஆய்வின் மூலம் மொத்தம் 410 கல்வெட்டுகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. இம்மொத்தக் கல்வெட்டுகளில் முழுமையான பாடங்களுடன் உள்ளவை 79 கல்வெட்டுகள்.

இதில், 78 கல்வெட்டுகள் தமிழ்க்கல்வெட்டுகளாகவும், ஒன்று மட்டும் சமஸ்கிருத மொழியில் முற்றிலும் கிரந்த எழுத்தில் எழுதப்பட்ட கல்வெட்டாகவும் உள்ளன. இதில், முதலாம் சடையவர்மன் குலசேகரபாண்டியன் (கி.பி. 1190-1216_ காலக்கல்வெட்டே தற்போதுள்ள கோயில் கல்வெட்டுகளில் காலத்தால் முதலாவதாகும்.

குறிப்பாக சோழர்கள் பாண்டிய நாட்டை சுமார் 200 ஆண்டுகாலம் ஆட்சி செய்தபோதும் இக்கோயிலின் பால் எவ்வித அக்கறையும் காட்டாதது வியப்பாக உள்ளது. சங்ககாலம் முதல் இருந்த கோயில் மிக எளிமையாக சிறியதாக இருந்திருக்க வேண்டும். அப்போதிருந்த கட்டுமானமோ அல்லது சிற்ப வடிவங்களோ கூட இப்போது எதுவும் இல்லை. கி.பி. 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயிலும்கூட சிதைவுக்குள்ளாகி, மாற்றார் படையெடுப்பால் சிதைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியப் படையெடுப்பு காரணமாக கோயில் சிதைவுக்குள்ளானது என்பது ஒருபுறம் இருப்பினும் இதற்கும் 50 ஆண்டுகளுக்கும் முன்பாகவே கோயிலின் எழுநிலைக்கோபுரமும், ஆடவல்லான் அரங்கமும், திருமாளிகையும் சிதைவுக்குள்ளாகித் திருத்திக் கட்டுவதற்காக நன்கொடை கொடுக்கப்பட்ட செய்தியும் கல்வெட்டிலே பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே இன்றைய கோயில் பலமுறை திருத்திக் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x