

பழநி முருகன் கோயில் தூய்மைப்பணி தொடர்பாக கோயில் தக்கார் வெளியிட்ட டெண்டர் அறிவிப்பை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற அமர்வு தடை விதித்துள்ளது.
பழநி முருகன் கோவில் தூய்மை பணி தொடர்பாக கோவில் செயல் அலுவலர் மற்றும் தக்கார் 20.8.2020-ல் வெளியிட்ட டெண்டர் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி சென்னையைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து, தூய்மை பணிக்காக கோவில் தக்கார் வெளியிட்ட டெண்டர் அறிவிப்பாணையை ரத்து செய்தும், பழநி முருகன் கோவிலுக்கு விரைவில் அறங்காவலர் குழுவை நியமிக்கவும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யவும், தடை விதிக்கவும் கோரி பழநி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தூய்மைப்பணி டெண்டரை எதிர்த்து டெண்டரால் எந்த பாதிப்பும் ஏற்படாத 3-வது நபர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனு விசாரணைக்கு உகந்தது இல்லை.
இதை கருத்தில் கொள்ளாமல் மனுவை விசாரித்து டெண்டரை ரத்து செய்து தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோயிலில் அறங்காவலர் குழுவை அமைக்கும் வரை, அறங்காவலர் குழுவின் பணிகளை சட்டப்படி தக்கார் மேற்கொள்ளலாம். கோவில் தக்கார் தரப்பில் பதிலளிக்க வாய்ப்பு வழங்காமலேயே தனி நீதிபதி டெண்டரை ரத்து செய்துள்ளார். அவர் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதுவரை தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி அமர்வு விசாரித்து, பழநி கோவில் தூய்மைப்பணி டெண்டரை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து, தூய்மைப்பணிக்கான டெண்டரை தொடரவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.