

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைந்துவிட்டார் என்கிற எண்ணம் மனதை அழுத்துகிறது. ஒவ்வொரு நாளும் இந்தத் தகவல் வந்துவிடக்கூடாது என அனைவரது எண்ணமுமாக இருந்த நிலையில், அந்தச் செய்தி கடைசியில் வந்துவிட்டது. பாடகராக அல்ல; அவரது பண்பால் அனைவரையும் கவர்ந்தவர் எஸ்பிபி.
1968-ம் ஆண்டு அந்தக் கல்லூரி மாணவர் எம்ஜிஆரிடம் அழைத்து வரப்படுகிறார். 'எனக்காக ஒரு பாடல் பாடவேண்டும் பாடுகிறாயா?' என்று கேட்கிறார் எம்ஜிஆர். மிகப் பிரபலமான மனிதரை பார்ப்பதே அபூர்வம் அவருக்காகப் பாடுவதா? அந்தக் கல்லூரி மாணவருக்குத் தலைகால் புரியவில்லை. மகிழ்ச்சியுடன் திரும்புகிறார்.
ஆனால், அவருக்கு மகரக்கட்டு எனும் தொண்டைப் பிரச்சினையால் பாட முடியாமல் போகிறது. ஆனாலும் எம்ஜிஆர் காத்திருந்து அவருக்கு வாய்ப்புக் கொடுத்தார். அப்போது எம்ஜிஆர் அந்த மாணவரிடம் சொன்னது:
''நீ எம்ஜிஆருக்கு பாடப்போகிறேன் என்று உன் நண்பர்களிடம், மற்றவர்களிடம் சொல்லியிருப்பாய்; உன் உடல் நலனால் பாட முடியாமல் போனது வெளியே தெரியாது. நீ சரியாகப் பாடவில்லை என்று எம்ஜிஆர் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றுதான் பேசுவார்கள். அதனால் உன் எதிர்காலம் பாதிக்கப்படும் அதனால் காத்திருந்தேன்'' என்று தெரிவித்துள்ளார்.
அந்த மாணவர் எஸ்பிபி. எம்ஜிஆர், எஸ்பிபி எதிர்காலம் குறித்து காட்டிய அக்கறையோ என்னவோ அதன் பின்னர் எஸ்பிபி உச்சம் தொட்டார். தான் இறக்கும் வரை அவர் செய்த சாதனைகள் 40,000 பாடல்கள், 50 ஆண்டுகளைக் கடந்த இசைப் பயணமாய்த் தொடர்ந்தது.
எம்ஜிஆருடனான அந்தச் சம்பவத்தை சில பேட்டிகளில் எஸ்பிபி கூறியுள்ளார். ''எம்ஜிஆர் இருந்த உச்ச நிலையில் என்னைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், ஒரு சின்ன பையனின் கனவு சிதைந்துவிடக்கூடாது என்பதில் அவர் காட்டிய அக்கறை என்னைச் சிலிர்க்க வைத்தது'' என்று எஸ்பிபி கூறினார்.
அதனால்தானோ என்னவோ எஸ்பிபி தனது வாழ்க்கை முழுவதுமே அதே பண்பைக் கடைப்பிடித்தார். எஸ்பிபிக்கு புகழ்ச்சி பிடிக்காது. மேடையில் யாராவது புகழ்ந்தால் உடனடியாகச் சிரித்தபடியே பேச்சை மாற்றிவிடுவார். அவர் அடிக்கடி சொல்வது எத்தனையோ பாடகர்கள், மகான்கள் வந்துள்ளனர். அதில் நான் ஒரு சிறுவன். அவ்வளவே என்று சொல்வார்.
பல பாடகர்களில் நானும் ஒருவன் என எளிமையாகக் கூறுவார். ஆனால் ரஜினிகாந்த் தனது இரங்கலில் குறிப்பிட்டது போன்று பல ஜாம்பவான்களுக்கு இல்லாத ஒரு பெருமை எஸ்பிபிக்கு உண்டு. 12-க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார். அத்தனை மொழிகளிலும் அவரது சிறப்பு அந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் பாடுவதுபோன்று உச்சரிப்பதுதான்.
இதைக் குறிப்பிடக் காரணம் அனைத்துச் சாதனைகளும் இருந்தாலும் செருக்கு இல்லா நிறைகுடமாய் நடந்துகொண்டதுதான். இதற்குக் காரணம் அவரிடம் இருந்த குழந்தைத்தனமான குறும்பா? அல்லது நகைச்சுவை உணர்வா தெரியாது. அவரது இரங்கல் செய்தியில் பேசிய அனைவரும் கூறியதில் ஒரு விஷயம் அனைவரும் குறிப்பிடும் விஷயமாக இருந்தது. அது அவர் மிகச் சிறந்த பண்பாளர் என்பதுதான்.
இதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம். எந்த மேடை ஏறினாலும் முதலில் தனது குருநாதர் தனக்கு வாய்ப்பளித்தவர் என கோதண்டபாணி பற்றி நன்றியுடன் குறிப்பிடுவார். அடுத்து எம்.எஸ்.வி, கே.வி.மகாதேவன் எனக் குறிப்பிடுவார். என்ன பகை ஊடல் இருந்த நேரத்திலும், இளையராஜா எனும் மகா கலைஞன் என வாய்க்கு வாய் அவரைப் புகழாத மேடைகள் இல்லை.
பேட்டிகளிலும் தன் பெருமை வராது. யாராவது பேசினாலும் பேச்சை மாற்றி மற்றவர்களைப் பற்றிச் சொல்லி அவர்களைப் புகழ்ந்துவிடுவார். அவரிடம் சிறப்பாக உள்ள இன்னொரு விஷயம், மேடையில் தன்னுடன் பாடுபவர்களை அவர்கள் மிகப்பெரிய பாடகருடன் பாடுகிறோம் என்கிற தயக்கத்தை உடைக்க, அவர்களுடன் குறும்பு செய்து இயல்பான நிலைக்குக் கொண்டு வந்துவிடுவார்.
ஜூனியர் சிங்கரில் தேர்வான அற்புதமாகப் பாடக்கூடிய சிறுவயதுப் பாடகி ஒருவர் மேடையில் அவருடன் பாட வரும்போது, அவரது ஒடிசலான உருவத்தைப் பார்த்து, 'என்ன இப்படி இருக்கிறாய், நான் பார் எப்படி ஃபிட்டாக இருக்கிறேன்' என்று கூற, அரங்கமே அதிர்ந்தது. 'இஞ்சி இடுப்பழகி' பாடல் பாடும்போது ஒரு மேடையில் இளையராஜாவிடம் அந்தப் பாடல் வரிகளைப் பற்றிப் பேசிவிட்டு, 'இடுப்பைப் பற்றி நாமல்லாம் பேசக்கூடாதுடா' என்று குறும்பாகக் கூறிவிட்டுச் செல்வார்.
இவர் குதூகலமாகக் கிண்டலடிப்பதை பார்வையாளர்கள், இசைக்குழுவினர் பெரிதும் ரசிப்பார்கள். சிறு குழந்தைகள் பாட வந்தால் இவரும் சிறு குழந்தையாய் மாறிவிடுவார். சில நேரம் பாடும்போதே அதில் வரும் வரிகளை வெகு கவனமாக உடன் பாடும் பெண் பாடகர்களை நோக்கிப் பாடி அவர்களை வெட்கப்படவைத்து அடுத்த கணம் வெகு சாதாரணமாக பாட்டில் கலந்திருப்பார்.
இதில் சில நேரம் அருகில் நின்று கோரஸ் பாடும் ஜூனியர் பாடகர்களும் சிக்கிக் கொள்வார்கள். சில ஆண் பாடகர்களின் இடுப்பில் கிள்ளுவது, இழுத்து அவர்கள் தோளில் கைபோட்டுப் பாடுவது என அவர்கள் தயக்கத்தை உடைத்துவிடுவார். மேடையில் ஏறியவுடன் முதலில் தனது குருமார்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, இசைக் கலைஞர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பவுன்சர்கள் வரை நன்றி சொல்வார்.
பாடும்போது திடீரென வரிகளை மாற்றிப் பாடுவது எஸ்பிபிக்கு கை வந்த கலை. சிப்பி இருக்குது முத்தும் இருக்குது என வரும் 'வறுமையின் நிறம் சிவப்பு' படப் பாடலின் இடையே கண்ணதாசனோ, எம்.எஸ்.வியோ எனச் சேர்த்துப் பாடுவார். அதைப் பல இடங்களில் பாடியுள்ளார். திடீரென பாடலின் மொழியை மாற்றிப் பாடுவார்.
சில பாடலில் வரும் வரிகளில் வரும் சிறிய சிறிய விஷயங்களை, சில பாடல்கள் பத்தாண்டுகள் கடந்திருந்தாலும் ரசிகர்கள் அந்த இடத்தில் வரும் சிறிய சிரிப்பையோ, சின்ன சப்தங்களையோ ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும்போது அதைச் சரியாகப் பிரதிபலிப்பார். அப்போது ரசிகர்கள் சிலிர்த்துப் போவார்கள்.
எஸ்பிபியிடம் இருக்கும் மற்றொரு சிறப்பு 74 வயதிலும் அவர் 25 வயதில் பாடிய அதே குரல், பாவம் மாறாமல் இருந்ததுதான். மேடையில் அவர் பழைய பாடல்களைப் பாடும்போது அவர் பாடுகிறாரோ அல்லது பின்னாலிருந்து பாடலை ஒலிபரப்புகிறார்களோ என்று எண்ணத்தோன்றும்.
ஒரு மனிதன் எத்தனை திறமைசாலியாக இருந்தாலும் மற்றவர்கள்பால் அவன் காட்டும் அன்பு, அவனது செருக்கில்லா பண்பான நடத்தை எப்போதும் போற்றப்படும். அவன் மறைந்தாலும் அந்தப் பண்பு போற்றப்படும். அதற்கு எஸ்பிபி மிகச் சிறந்த சான்று. அவர் யாரையும் விமர்சித்தோ, யாருடனும் பிணக்கு, சண்டை என்றோ இருந்ததில்லை. அவரது 50 ஆண்டுகளைக் கடந்த இசைப் பயணத்தில் எங்குமே இது தொடர்பாகக் கேள்விப்பட்டதில்லை.
1965 முதல் மூன்று தலைமுறைகளுக்கு எஸ்பிபி பாடியுள்ளார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, என்டிஆர், நாகேஸ்வரராவ் தொடங்கி ரஜினி, கமல், விஜயகாந்த் என 80களின் நாயகர்களுக்கும், 90களில் ராமராஜன், பிரபு, சத்யராஜ், மோகன், அஜித், விஜய், அதன் பின்னர் தற்போது 2000, 2020கள் வரை ('பேட்ட' படத்தில் ரஜினிக்குப் பாடியது வரை) எஸ்பிபி நான்காவது தலைமுறைக்கும் பாடியுள்ளார்.
இந்தியில் சல்மான்கான் அறிமுகமான 'மைனே பியார் கியா' படத்தின் அனைத்துப் பாடல்களையும் பாடி அவருக்குப் பெரிய வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்.
தமிழில் உச்ச நட்சத்திரங்கள் ஜெமினி, எம்ஜிஆருக்குப் பாடி தன் இசைப் பயணத்தை ஆரம்பித்தவர், 'பேட்ட'யில் ரஜினிக்காகப் பாடி முடித்தது இயல்பாக அமைந்ததா? இயற்கையா? அவரை தென்னிந்திய ரசிகர்கள் தங்கள் மாநிலத்தில் பிறந்தவர் என்றே நினைக்கின்றனர். ஆனால் அவர் முன்னாள் சென்னை மாகாணம், தற்போதைய ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரியில் பிறந்தவர்.
நாயகர்கள் அவர்கள் நடிக்கும் படங்களில் மட்டுமே வாழ்வார்கள். ஆனால் நாயகர்களின் குரலாக ஒலித்த எஸ்பிபி இந்த வரிகளை எழுதும் நேரத்திலும், இதற்குப் பின்னரும் எங்கோ ஒரு நாயகனின் குரலாய் ஏதாவது ஒரு தளத்தில் பாடிக்கொண்டிருப்பார்.
காற்றில் அவரது குரல் கலந்து எப்போதும் தமிழ் மக்களின் வாயில் அவர்களது குரலாய் வாழ்ந்து கொண்டிருப்பார் என்பது நிச்சயம். சிரித்த முகமும், கிண்டலும், குறும்புத்தனமும் நிறைந்த, மற்றவர்களை மதிக்கத்தெரிந்த ஒரு மகத்தான கலைஞன் என்று யாராலும் எப்போது நினைவுகூரப்படுவான்.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் அவர்கள் வாழ்க்கையில் எப்போதோ நடந்த சம்பவங்கள் அப்போது ஒலித்த பாடல் மூலம் மீண்டும் சுகமான, சோகமான நினைவுகளால் நினைவுகூரப்படும். அதை ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எப்போதும் எஸ்பிபியின் பாடல் செய்துகொண்டே இருக்கும். அப்போது எஸ்பிபியும் நினைவுகூரப்படுவார்.