Published : 25 Sep 2020 03:09 PM
Last Updated : 25 Sep 2020 03:09 PM

எஸ்பிபி மறைவு: ஓபிஎஸ், வைகோ, டிடிவி, கே.எஸ்.அழகிரி இரங்கல்

எஸ்பிபி மறைவுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 1.04 மணி அளவில் சென்னையில் தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு இந்தியா முழுவதுமிருந்து அரசியல், சினிமா, பல்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் இரங்கல்:

“தேமதுரக் குரல் கொண்டு இவ்வையகத்தை மகிழ்வித்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், நம்மை விட்டு மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயர் அடைந்தேன்

வைரஸ் கொடுநோய்த் தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம், அபாயக் கட்டங்களைத் தாண்டி முன்னேற்றம் பெற்று வருகிறார் என்ற தகவலைக் கேட்டு, அவர் நலம் பெற்று மீண்டு வருவார் என நம்பிக்கையுடன் இருந்த நேரத்தில் அவர் காலமானார் என்ற செய்தியைக் கேட்டு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பரிதவிக்கின்றனர்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திரையிசை உலகில் ஒரு சகாப்தமாக விளங்கினார். தனது இன்னிசைத் தேன் குரலால் லட்சக்கணக்கான இசை ரசிகர்களை மட்டுமல்ல அவரது பாடலைக் கேட்கும் அனைவரையும் ஈர்த்து தன் வசமாக்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றவராகத் திகழ்ந்தார். பாடலுக்கு என்றே பிறந்தவர் எஸ்பிபி என்று சொல்லுமளவிற்கு, 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, அதிக எண்ணிக்கையிலான பாடலைப் பாடியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் வகையில் சாதனை படைத்தவர் ஆவார்.

தமிழ் மொழியில் மட்டுமன்றி மொத்தம் நான்கு மொழிகளில் பாடல்கள் பாடி தேசிய விருது பெற்ற ஒரே பாடகர் என்ற பெருமைக்கு உரியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். ஒரே நாளில் 15 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பல்வேறு மொழிகளில் பாடி ஒளிப்பதிவு செய்து சாதனைச் சின்னமாக அவர் திகழ்ந்தார்.

பத்மஸ்ரீ, பத்ம பூஷண் உட்பட பல்வேறு புகழ்மிகு விருதுகளைப் பெற்ற எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பாடல் பாடுவது மட்டுமன்றி நடிப்பிலும் தனி முத்திரை பதித்தவர். 72 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரையிசையுலகில் கோலோச்சியவர்.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது அன்பைப் பெற்று, அவர்கள் நடித்த படங்களில் சிறப்பான பாடல்களைப் பாடியவர். தனது அற்புதக் குரல் வளத்தால் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரையும் ஈர்த்து இந்திய அளவில் எண்ணிலடங்கா இசை ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர்.

அன்னாரது மறைவு நமக்கெல்லாம் சொல்லொணாத் துயரத்தை அளித்திருக்கிறது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைந்தாலும், கானக்குரல் கொண்டு அவர் பாடிய பாடல்கள் என்றுமே மறையாது ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது பெருமையை நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.

சீரும் சிறப்பும் பேரும் புகழும் கொண்டு திரையிசை உலகில் தனக்கென ஒரு தனி இடம் கொண்டிருந்த எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி இத்துயரைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமை பெற இறைவனை வேண்டுகிறேன். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை இறைஞ்சிப் பிரார்த்திக்கின்றேன்”.

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல்:

''தன் கானக் குரலால் கோடானு கோடி இதயங்களை ஈர்த்தவரும், 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை படைத்தவருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மரணத்தோடு நீண்ட நெடிய போராட்டம் நடத்தி, மறைந்துவிட்டார் என்ற செய்தி மனதை உலுக்குகிறது.

உயிர் ஓய்ந்து உடலால் அவர் மறைந்தாலும், யாழ் மீட்டுவது போன்ற அவரது கானக் குரல் இன்னும் எவ்வளவு காலமானாலும் காற்றோடு கலந்திருக்கும். கேட்போரைக் காந்தமெனக் கவர்ந்திழுக்கும்.

திரைப்பட இசை உலகில் அழியாப் புகழோடு நிரந்தரமாக வாழ்வார். அந்தப் பாடல் இசை மேதையை இழந்து கண்ணீரில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், கணக்கற்ற அவரது ரசிகர்களுக்கும், அவரை உயிராய் நேசித்த கலை உலகப் பெருமக்களுக்கும் என் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்''.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல்:

“இந்தியாவின் தலைசிறந்த பாடகரும், 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி உலகப் புகழ் பெற்ற எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். பத்மஸ்ரீ, பத்ம பூஷண், 6 தேசிய விருதுகளைப் பெற்று சர்வதேச அங்கீகாரம் பெற்ற பாடகரை இன்று இழந்திருக்கிறோம்.

தமது பாட்டுத் திறமையால் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த பேராற்றல்மிக்க எஸ்.பி.பி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது விரைவில் குணமடைந்து மீண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால், கரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 51 நாட்கள் கடும் முயற்சிக்குப் பிறகும் மீட்க முடியாமல் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறார்.

நாட்டு மக்களை, குறிப்பாக தமிழக மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இழப்பு என்பது ஈடு செய்யவே முடியாத பேரிழப்பாகும். இன்னொரு எஸ்.பி.பி.யை எப்போது காணப் போகிறோம் ? அவரது இடத்தை யாரால் நிரப்ப முடியும் ?

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், லட்சக்கணக்கான ரசிகர் பெருமக்களுக்கும், திரையுலகத்தினருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்:

“பின்னணி பாடகர் 'பத்ம பூஷண்' எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. தன் வசீகரமிக்க குரலால் மொழிகளைக் கடந்து மக்களின் நேசத்தைப் பெற்றவர் எஸ்.பி.பி. 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் ஜொலித்தவர்.

எஸ்.பி.பி.யின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x