Published : 25 Sep 2020 01:24 PM
Last Updated : 25 Sep 2020 01:24 PM

'பாடும் நிலா' எஸ்.பி.பி காலமானார்: சோகத்தில் மூழ்கிய திரையுலகம்

சென்னை

இந்தியத் திரையுலகில் 'பாடும் நிலா' என்று அனைவராலும் அழைக்கப்படும் பிரபல இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 74.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனக்கு லேசான கரோனா தொற்றுதான் என்று தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை எஸ்பிபி வெளியிட்டார்.

அதற்குப் பிறகு சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது. எஸ்.பி.பிக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருடைய உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு வந்தது. வாய் வழியே சாப்பிடும் அளவுக்கு அவருடைய உடல்நிலை தேறியது.

இதனிடையே திடீரென்று நேற்று (செப்டம்பர் 24) அவருடைய உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. அவருக்கு ஏற்கெனவே இருந்த நுரையீரல் தொற்று திடீரென்று அதிகரிக்கவே மிகவும் மோசமான நிலைக்கு அவரது உடல்நிலை சென்றது. மேலும், மூளையிலும் ரத்தக்கசிவு ஏற்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவருடைய உயிர் இன்று (செப்டம்பர் 25) மதியம் சுமார் 1 மணிக்குப் பிரிந்தது. இதனை இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தினார். எஸ்பிபியின் மகன் சரணும் ட்விட்டரில் மறைவுச் செய்தியை உறுதி செய்தார்.

எஸ்பிபியின் மறைவு இந்தியத் திரையுலகினரைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அவருடைய மறைவுச் செய்தி வெளியானவுடன் கண்ணீர் மல்க தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மனைவியின் பெயர் சாவித்திரி. பல்லவி என்ற மகளும், எஸ்.பி.சரண் என்ற மகனும் இருக்கிறார்கள். இருவருக்குமே திருமணமாகிவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x