

திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயப் பரப்பை அதிகரிக்கவும், குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் வழிவகுக்கும் அமராவதி, சண்முக நதி, நங்காஞ்சியாறு, குடகனாறு ஆகிய நதிகளை இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் அமராவதி ஆறு, சண்முக நதி, நல்லதங்காள் ஓடை, நங்காஞ்சியாறு, குடகனாறு ஆகியவற்றை இணைத்து உபரி நீரை சேமிக்கும் திட்டத்துக்காக கடந்த 2018-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
முதல்கட்ட ஆய்வுப் பணிக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கியது. இத்திட்டம் குறித்து மதுரை பொதுப்பணித் துறை (திட்டம் மற்றும் வடிமைப்பு) செயற்பொறியாளர் இளங்கோ தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்யப் பட்டது. இது குறித்து செயற்பொறியாளர் இளங்கோ கூறியதாவது: ரூ.700 கோடி மதிப்பில் பொதுப்பணித் துறைக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பியுள்ளோம். இதை ஆய்வு செய்த தலைமைப் பொறியாளர் அலுவலக அதிகாரிகள், சில சந்தேகங்களை நிவர்த்தி செய்யக் கேட்டுள்ளனர். அதற்கான விளக்கங்களை தயாரித்து அனுப்ப உள்ளோம். இதன் பின் பொதுப்பணித் துறையில் இருந்து அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்படும். இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து முடிவு செய்யும் என்றார்.
இது குறித்து ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் ப.வேலுச்சாமி எம்.பி. பேசும்போது, திட்ட மதிப் பீடான ரூ.700 கோடியை தமிழக அரசால் திரட்டுவது சிரமம். எனவே, மாநில அரசும், மத்திய அரசின் நீர்வளத் துறை அமைச்சகமும் இணைந்து நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் மத்திய அரசு தனது பங்களிப்பாக நிதி ஒதுக்க வேண்டும் என்று வலி யுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. பொதுப்பணித் துறையினர் தயாரித்துள்ள திட்ட அறிக்கையின் படி நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தினால் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, பழநி, ரெட்டியார்சத்திரம், வேடசந்தூர், வடமதுரை.
குஜிலியம்பாறை ஒன்றிய பகுதிகள் மற்றும் கரூர் மாவட்டத்துக்குட்பட்ட அரவக்குறிச்சி ஒன்றியப் பகுதிகளில் ஒரு லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். இதன் மூலம் வறட்சியை முற்றிலும் போக்கலாம். விவசாயப் பரப்பு அதிகரிக்கும் நிலையில் விளை பொருட்கள் உற்பத்தியும் இரு மடங்காக உயரும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் நீர்வளத்தில் போதிய தன்னிறைவு பெற்ற மாவட்டமாக திண்டுக்கல் மாறும். எனவே இத்திட்டத்தை செயல்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது திண்டுக்கல் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.