நியாயவிலைக் கடைகளில் மண்ணெண்ணெய் விலையை உயர்த்தியது நியாயமில்லாத செயல்: ஸ்டாலின் கண்டனம்

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
Updated on
1 min read

நியாயவிலைக் கடைகளில் மண்ணெண்ணெய் விலையை உயர்த்தியது நியாயமில்லாத செயல் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நியாயவிலைக் கடைகளில் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல், மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு 1.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், 15 ரூபாய் என இருந்த ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை, 16.50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளர் சஜன்சிங் சவாண் நேற்று (செப். 24) வெளியிட்டார்.

இந்நிலையில், இது தொடர்பாக, திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (செப். 25), தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"பெரும்பான்மை ஏழை, எளிய மக்கள் சமையலுக்கான எரிபொருளாகப் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் விலையை, நியாய விலைக் கடைகளில் வரும் அக்டோபர் 1 முதல், ஒரு லிட்டருக்கு 1.50 ரூபாய் உயர்த்தி, 15 ரூபாய் என்பதை, 16.50 ரூபாய்க்கு விற்கப் போகிறார்களாம். மண்ணெண்ணெயின் இந்த விலை உயர்வு கண்டனத்திற்குரியது.

கரோனா நோய்த்தொற்றின் விளைவாக, வாங்கும் சக்தியைப் பெருமளவுக்கு இழந்திருக்கும் எளிய மக்களின் முதுகில், அதிமுக அரசு, விலை உயர்வின் மூலம், மேலும் சுமையை ஏற்றுவது, சிறிதும் இரக்கமில்லாத, நியாயமில்லாத செயல்!

இந்த விலை உயர்வை அரசே ஏற்றுக்கொண்டு, பழைய விலையிலேயே நியாயவிலைக் கடைகளில் மண்ணெண்ணெயை வழங்க வேண்டும்".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in