

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே விவசாயி ஒருவர் பசுவின் சாணத்திலிருந்து இயற்கை முறையில் விபூதி தயாரிக்கும் தொழி லில் ஈடுபட்டுள்ளார்.
கல்லல் அருகே சொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் சம்பத்(66). இவர் நடத்தி வரும் மாட்டுப் பண்ணையில் காங்கேயம், வெச்சூர், மலைநாடு கிடா (கேரளா), நாகூரி (ராஜஸ்தான்), தர்பார்க்கர், கிர் (குஜராத்) உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டு இன மாடுகளை வளர்த்து வருகிறார். இப்பண்ணை யில் 10 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். பசுவின் சாணத்திலிருந்து இயற்கை உரம் மட்டுமின்றி, விபூதி தயாரித்தும் விற்பனை செய்கிறார்.
இதற்கென, தினமும் பசுக்களின் சாணத்தைச் சேகரித்து உருண்டையாக்கி காய வைக்கப்படுகிறது. அவை நன்கு காய்ந்ததும் புற்று மண்ணால் அமைக்கப் பட்ட சூளைக்குள் சாண உருண்டையை வைத்து புகை மூட்டம் போடுகின்றனர். இவை குறிப்பிட்ட வெப்பநிலையில் எரிந்து விபூதியாகிறது. மாதம் 400 கிலோ விபூதி தயாரிக்கின்றனர். இங்கு தயாரிக்கப்படும் விபூதி ராமேசுவரம், திருச்செந்துார் உள்ளிட்ட கோயில்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
இதுகுறித்து சம்பத் கூறியதாவது: எந்த கலப்படமும் இன்றி, இயற்கை முறையில் விபூதி தயாரிக்கிறோம். செலவும், வருவாயும் சமமாக இருந்தாலும், ஆன்மிக நாட்டத்தால் இத்தொழிலை மேற்கொள்கிறேன். தற்போது விபூதி கிலோ ரூ.500, பஞ்சகவ்யம் லிட்டர் ரூ.150 முதல் ரூ.250 வரை, பசுவின் கோமியம் லிட்டர் ரூ.30 முதல் ரூ.100-க்கு விற்கிறோம். பசுக்களுக்கான தீவனத்துக்காக 4 ஏக்கரில் கோ-4 ரக பசுந்தீவனம் வளர்க்கிறோம் என்று கூறினார்.