

மாணவர்கள் மீதான ஆசிரியர் களின் அக்கறையால் திருமங்கலம் அருகே மேலக்கோட்டை அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம் மேலக்கோட்டையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தற்போது 227 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள் என 7 பேர் பணியாற்றுகின்றனர். பள்ளியில் தற்போது ஆங்கில வழிக்கல்வி வகுப்புகளும் நடைபெறுகின்றன.
ஒவ்வொரு மாணவர் மீதும் தனித்து அக்கறை காட்டும் ஆசிரியைகளின் செயல்பாடுகளால் சுற்றுப்புறக் கிராமங்க ளிலிருந்தும் மாணவர்கள் இப்பள்ளி யில் விரும்பி வந்து சேர்கின்றனர். ஆசிரியர்கள் தம் சொந்த செலவில் வகுப்பறையில் டைல்ஸ் பதித்துள்ளனர். மாணவர்களுக்கு ரத்த வகை கண்டறிய ரத்தப் பரிசோதனைக்கான செலவை ஏற்கின்றனர். பள்ளி முடிந்த பின் ஆசிரியர்கள் வீட்டுக்குச் செல்லாமல் பொறுப்புடன் மாணவர் களை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கச் செய்து பேருந்துகளில் ஏற்றி அனுப்புகின்றனர்.
பின்னர் வேன்களில் செல்லும் மாணவர்களையும் ஏற்றிவிட்டு வீடு வந்து சேர்ந்துவிட்டனரா என அக்கறையுடன் கேட்கின்றனர்.
இதுபோன்று பல்வேறு காரணங்களால் மேலக்கோட்டை அரசு தொடக்கப்பள்ளி மாண வர்கள் சேர்க்கையில் ஒன்றியத்தில் முதலிடத்தில் உள்ளது.
இது குறித்து தலைமையாசிரியர் மகேஸ்வரி கூறியதாவது: எங்கள் பள்ளியை நம்பி பெற்றோர்கள் குழந்தைகளை அனுப்புகின்றனர். அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பள்ளி முடிந்ததும் மாணவர்களை பொறுப்புடன் அனுப்பிவைக்கிறோம். ஒவ்வொரு மாணவரின் நலனிலும் அக்கறையெடுத்து கற்பிக்கிறோம். யோகா, கணினி என தனித்திறமைகள் வளர்த்திட சிறப்புப் பயிற்சி அளிக்கிறோம், இதையறிந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எங்கள் பள்ளியில் வந்து சேர்க்கின்றனர். இந்த ஆண்டு மட்டும் 50 மாணவர்களை கூடுதலாகச் சேர்த்துள்ளோம். இதனால், மாணவர்கள் எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட அளவில் எங்கள் பள்ளி மாணவர்கள் பல பரிசுகளைப் பெற்றுள்ளனர் என்றார்.