Published : 25 Sep 2020 11:21 AM
Last Updated : 25 Sep 2020 11:21 AM

கரோனா தொற்று சூழல், மழையால் தருமபுரி மாவட்டத்தில் பட்டுக்கூடுகள் உற்பத்தி சரிவு

கரோனா தொற்று சூழல், மழையால் பட்டுக்கூடு உற்பத்தி குறைந்துள்ள நிலையில் கூடுகளுக்கான விலை சீராக அதிகரித்து வருகிறது.

தருமபுரியில் தமிழக பட்டு வளர்ச்சித்துறை சார்பில் பட்டுக்கூடுகள் ஏல விற்பனை மையம் செயல்படுகிறது. தமிழகத்தின் பெரிய பட்டுக்கூடு ஏல விற்பனை மையமான இங்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட சுற்று வட்டார மாவட்டங்களைச் சேர்ந்த பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் பெரும்பாலும் தங்கள் பட்டுக்கூடுகளை விற்பனை செய்ய வருவர். தற்போது கரோனா மற்றும் மழைக்காலம் உள்ளிட்ட சூழலால் பட்டுக்கூடு உற்பத்தி பெருமளவில் சரிந்துள்ளது. இதனால், ஏல மையத்துக்கு விற்பனைக்கு வரும் பட்டுக்கூடுகளின் அளவும் குறைவாகவே உள்ளது. அதேநேரம், பட்டுக்கூடுகள் வரத்து குறைந்த நிலையில் கூடுகளுக்கான விலை சீராக உயர்ந்து வருகிறது.

இதுதொடர்பாக தருமபுரி பட்டுக்கூடு ஏல மையத்தினர் கூறியது:

தருமபுரி பட்டுக்கூடு ஏல விற்பனை மையத்துக்கு ஒரு நாளில் அதிகபட்சமாக 200 லாட் வரை கூட கூடுகள் விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு லாட் என்பது 45 முதல் 50 கிலோ எடை கொண்டது. தற்போதைய நிலவரப்படி ஒரு நாளில் சராசரியாக 50 லாட் வரை மட்டுமே கூடுகள் விற்பனைக்கு வருகிறது. கடந்த 19-ம் தேதி மிகக் குறைந்த அளவாக 10 லாட் கூடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. ஓரிரு விவசாயிகளைத் தவிர பெரும்பாலும் வெள்ளைக் கூடுகளை தான் உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த ரக கூடுகளுக்குத் தான் விலையும் சற்று அதிகம். 22-ம் தேதி ஏலத்தின்போது கூடுகளின் தரத்துக்கு ஏற்ப அதிகபட்ச விலையாக ஒரு கிலோவுக்கு ரூ.321 கிடைத்தது. சராசரி விலை ரூ.249.20. அதேபோல, நேற்றைய ஏலத்தில் அதிகபட்ச விலையாக ரூ.320.50, சராசரி விலை ரூ.276.32 கிடைத்தது.

கூடுகள் வரத்து குறைந்துள்ள நிலையில், கூடுகளுக்கான விலை சீராக உயர்ந்து வருகிறது. பட்டுக்கூடு விவசாயிகளைப் பொறுத்தவரை தற்போதைய விலை நிலவரம் நிறைவளிக்கக் கூடியதாக உள்ளது. கரோனா தொற்று சூழல் இயல்படைந்து, மழைக்காலமும் முடிவுக்கு வரும்போது கூடுகளின் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெளி சந்தையில் பட்டுநூலுக்கான தேவையைப் பொறுத்து அன்றைய சூழலில் கூடுகளுக்கான விலை நிலவரம் அமையும்.இவ்வாறு கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x