

நாட்றாம்பள்ளி அருகே தமிழக - ஆந்திர எல்லையில் விவசாய நிலத்தில் தந்தையுடன் காவலுக்கு படுத்திருந்த பிளஸ் 2 மாணவியை ஒற்றை யானை மிதித்து கொன்றது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அடுத்த தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் பருத்திக்கொல்லை என்ற கிராமம் உள்ளது. ஆந்திர வனப்பகுதியையொட்டியுள்ள இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகன் (53). இவர், தனது விவசாய நிலத்தையொட்டி வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
தனது விவசாய நிலத்தில் தற்போது நிலக்கடலை பயிரிட்டுள்ளார். இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வரும் வன விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதால் இரவு நேரங்களில் முருகன் தனது மனைவி அல்லது மகளுடன் காவலுக்கு விவசாய நிலத்தில் படுத்து உறங்குவது வழக்கம்.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு முருகன் பிளஸ் 2 படிக்கும் தனது மகள் சோனியாவுடன் (17) விவசாய நிலத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 3.15 மணியளவில் யானை பிளிறும் சத்தம் கேட்டதும் முருகன் கண்விழித்தார்.
அப்போது, ஒற்றை யானை ஒன்று தும்பிக்கையால் முருகனின் வீட்டை இடித்துக் கொண்டிருந்தது. இதைக்கண்ட முருகன் அலறிக் கூச்சலிட்டார். அப்போது அருகே படுத்திருந்த சோனியா கண் விழித்தார். உடனே, முருகன் யானையை விரட்ட கூச்சலிட்டார். வீட்டுக்குள் இருந்த முருகனின் மனைவியும் வெளியே ஓடி வந்தார்.
உடனே, வலது பக்கமாக திரும்பிய யானை கட்டிலில் படுத்திருந்த சோனி யாவை நோக்கி ஓடி வந்தது. இதற்குள் யானை அவரை காலால் மிதித்து தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதில், பலத்த காயமடைந்த சோனியா பரிதாபமாக உயிரிழந்தார். உடனே, யானை பின்பக்கமாக திரும்பி வனப் பகுதியை நோக்கி சென்றது. இதுகுறித்து, தமிழக - ஆந்திர வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அங்கு வந்த வனத் துறையினர் சோனி யாவின் உடலை கைப்பற்றி ஆந்திர மாநிலம் குப்பம் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.