Published : 25 Sep 2020 10:22 AM
Last Updated : 25 Sep 2020 10:22 AM

திருப்பூரில் சர்வதேச தரத்திலான மைதானங்கள்: விளையாட்டு வீரர்களின் கனவு நனவாகுமா?

திருப்பூரில் சர்வதேச தரத்திலான கால்பந்து மைதானம், தடகளவிளையாட்டுக்கான ஓடுதளங்கள், வாலிபால், கூடைப்பந்து மைதானங்கள் அமைக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. விளையாட்டுக்காக போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், திறமையான விளையாட்டு வீரர்கள் உருவாவதில் சிக்கல் இருப்பதாக விளையாட்டு ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகம் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் செயல்படுகிறது. இறகுப் பந்து உள்ளிட்டசில போட்டிகளுக்கான பயிற்சி மைதானங்கள் தவிர வேறு வசதிகள் அங்கு இல்லை. இதனால், குழுப் போட்டிகள், தனிநபர் போட்டிகளை நடத்த தனியார் மைதானங்கள், பள்ளிகளைச் சார்ந்திருக்கும் நிலையே தற்போது வரை உள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கால்பந்து விளையாட்டு சங்க நிர்வாகிகள் கூறும்போது, "தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் பதிவு பெற்ற அணிகளை கொண்டு ஆண்டுதோறும் திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏராளமான கால்பந்து வீரர்கள் மாநில,தேசிய அளவில் சாதிக்கும் அளவுக்கு வளர்ந்து வருகின்றனர். ஆனால், மாவட்டத்தில் கால்பந்து விளையாட்டுக்கென இதுவரை தனி மைதானம் இல்லை. சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானம் மற்றும் பிற அரசுப் பள்ளி மைதானங்களில் போட்டிகளை நடத்துகிறோம். அந்த கல்வி நிறுவனங்களில் தேர்வுகள் அல்லது பிற நிகழ்ச்சிகள் நடைபெற்றால், போட்டிகளை நடத்த முடியாது. உடுமலை, தாராபுரம், பல்லடம், அவிநாசி போன்ற புறநகர்ப் பகுதிகளில் இருந்து வரும் அணிகள் ஓய்வெடுக்கக்கூட வசதிகள் இல்லை.

கால்பந்து மட்டுமின்றி, பிற விளையாட்டு களுக்கும்கூட பெரிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. திருப்பூரில் அனைத்து விளையாட்டு வளர்ச்சிக்கும் இது பெரும் தடையாக உள்ளது. எனவே, திருப்பூரில் விளையாட்டு வளர்ச்சிக்குத் தேவையான தரமான கட்டமைப்பு வசதிகளை விரைவாக உருவாக்க வேண்டும்" என்றனர்.

திருப்பூர் மாவட்ட விளையாட்டுஅலுவலர் எஸ்.எம்.குமரன் கூறும்போது,"திருப்பூரில் சர்வதேச தரத்திலான மைதானங்களை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுளளன. உள்விளையாட்டு அரங்கு அமைந்துள்ள பகுதியின் பின்புறத்தில் 11.50 ஏக்கர் பரப்பில் கால்பந்து மைதானம், தடகளத்துக்கான சிந்தெடிக் ஓடுதளம், வாலிபால், நீச்சல் குளம் கொண்ட ஒருங்கிணைந்த விளையாட்டு மையம் அமைக்க தமிழக அரசு ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. வரும் அக்டோபர் இறுதியில் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளது. இது திருப்பூர் விளையாட்டு வீரர்களின் மேம்பாட்டுக்கு உதவும்" என்றார். பெ.னிவாசன்


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x