முதல்வர் பழனிசாமி விவசாயிகளுக்கு மிகப்பெரும் நம்பிக்கை துரோகத்தை இழைத்து விட்டார்; கனிமொழி விமர்சனம்

கனிமொழி: கோப்புப்படம்
கனிமொழி: கோப்புப்படம்
Updated on
1 min read

முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கை துரோகத்தை இழைத்திருப்பதாக, மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அமைச்சரவையிலிருந்து சிரோமணி அகாலி தள கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கடந்த வாரம் ராஜினாமா செய்தார்.

நாடு முழுவதும் விவசாயிகள், விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவை எதிர்த்து வருகின்றன. அதிமுக இந்த மசோதாக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் இந்த மசோதாக்களை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

இந்த மசோதாவால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும், விவசாயிகளின் நலனுக்காகவே இந்த மசோதாக்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று பாஜக தலைமையிலான மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் நேற்று (செப். 24) செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, "வேளாண் மசோதாக்களை அனைவரும் எதிர்த்து வருகின்றனர். மத்திய அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்திருக்கிறார். திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. இவ்வளவுக்குப் பிறகும் கூட, தன்னை விவசாயி என கூறிக்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இம்மசோதாக்களை ஆதரித்திருப்பது விவசாயிகளுக்கு இழைத்திருக்கும் மிகப்பெரிய நம்பிக்கை துரோகம்" என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in