முறைகேடாக நிதி பெற்றவர்களிடம் இருந்து பணத்தை திரும்பப் பெற 100 நாள் வேலை தர முடிவு

முறைகேடாக நிதி பெற்றவர்களிடம் இருந்து பணத்தை திரும்பப் பெற 100 நாள் வேலை தர முடிவு
Updated on
1 min read

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் முறைகேடாக பணத்தை பெற்றவர்களிடம் இருந்து, அதற்கான தொகையை திரும்பப் பெறும் வகையில் அவர்களுக்கு 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கி, அந்தத் தொகைக்கு நேர் செய்ய வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரன்குராலா ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பிரதமர் கிசான் நிதியுதவித் திட்டத்தில் வழங்கப்படும் நிதியுதவியை விவசாயிகள் அல்லாதவர்கள் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதுதொடர்பாக 14 மாவட்டங்களில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

முறைகேடாக பணம் பெற்றவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் திரும்ப பெறப்பட்டு வருகின்றன. கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் வீடு வீடாகச் சென்று, ‘பணத்தைத் திரும்ப செலுத்த வேண்டும்; இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று கடந்த 10 நாட்களாக அறிவுறுத்தி வருகின்றனர். ஆனாலும், பெரிய அளவில் பணம் திரும்பவில்லை.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வேளாண், ஊரக வளர்ச்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற ஆட்சியர் கிரன் குராலா பேசும்போது, “பிஎம் கிசான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்களிடம் இருந்து திரும்ப பெற வங்கி அதிகாரிகளிடம் பேசுங்கள். சில வங்கிகள் பணத்தைத் திரும்பப் பெற்றுத் தர மறுப்பதாக அறிகிறேன். அவ்வாறு மறுக்கும் வங்கிகளில் அரசு சார்பில் செலுத்தப்பட்டிருக்கும் வைப்புத் தொகையை திரும்ப பெறும் நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்.

ஊரக பகுதிகளில் முறைகேடாகப் பணத்தைப் பெற்றவர்களில் சிலர், கையில் போதிய காசு இல்லாமல் இருக்கும் சூழ்நிலையும் உள்ளது. எனவே அவர்களை 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் இணைத்து அட்டை வழங்கி, அவர்களுக்கு கண்டிப்பாக வேலை வழங்க வேண்டும்.

அப்படி பணியாற்றியோருக்கு ஒருநாள் ஊதியமான ரூ.256-ஐ வழங்கி, 10 நாட்களுக்கான ஊதியத்தை, பிஎம் கிசான் அக்கவுன்டில் வரவு வைத்து நேர் செய்ய வேண்டும். அவர்கள் பெற்றுள்ளத் தொகைக்கு இணையாக 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணி தர வேண்டும்" என்று அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in