மாநிலத்தில் முதல் முறையாக முன்னோட்ட அடிப்படையில் திருச்சி மாவட்ட ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம்: அக்டோபர் 1-ம் தேதி முதல் தொடக்கம்

அம்பிகா சேகர்
அம்பிகா சேகர்
Updated on
1 min read

தமிழகத்தில் முதல் முறையாக திருச்சி மாவட்டத்தில் முன்னோட்ட அடிப்படையில் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் அக்.1-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

தேசிய சுகாதாரத் திட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில், மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியில் செறிவூட்டப்பட்ட அரிசியை கலந்து வழங்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கான செலவில் 75 சதவீதத்தை மத்திய அரசும், 25 சதவீதத்தை மாநில அரசும் பகிர்ந்து கொள்கின்றன.

தமிழகத்தில் முதல் முறையாக முன்னோட்ட அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் இந்த திட்டத்தை அக்.1-ம் தேதி முதல் செயல்படுத்த திட்டமிட்டு, இதை செப்.21-ம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

செறிவூட்டப்பட்ட அரிசி

தயாமின், நயாசின் அடங்கிய திரவத்தில் அரிசியை நனைத்து உலர வைத்து, அதன் மேல் இரும்புச்சத்துமிக்க பைரோ பாஸ்பேட்டுகளை தூவி செறிவூட்டப்பட்ட அரிசி அதற்குரிய ஆலைகளில் தயாரிக்கப்படுகிறது.

100 கிராம் செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்புச் சத்து 4.25 மில்லி கிராம், போலிக் அமிலம் 12.5 மைக்ரோ கிராம், வைட்டமின் பி12 0.125 மைக்ரோ கிராம் ஆகியவை அடங்கியுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் 100 கிலோ சாதாரண அரிசியுடன் ஒரு கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி கலக்கப்பட்டு ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது. இதற்கென ஏற்கெனவே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் சாதாரண அரிசியுடன் செறிவூட்டப்பட்ட அரிசி கலக்கப்பட்ட 50 கிலோ மூட்டைகளை, ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த அரிசியை உட்கொள்வதன் மூலம் இரும்புச்சத்து, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் சத்துகள் உடலுக்கு கிடைக்கும் என தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்

இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் அம்பிகா சேகர், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: பொதுவாக அரிசி உணவை அதிக அளவில் நாம் எடுத்துக் கொள்வதால் இரும்புச்சத்து நம் உடலுக்கு கிடைப்பதில்லை. இதனால் ரத்த சோகை போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

செறிவூட்டப்பட்ட அரிசியை கலந்து வழங்குவதால் பாதிப்புகள் ஏதுவும் ஏற்படாது. எதிர்பார்க்கும் அளவுக்கு நன்மை அளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏற்கெனவே கோதுமை மாவு, பால் பவுடர் உள்ளிட்டவை செறிவூட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in