

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்களுக்கு வீடு தேடிவந்து வழங்க, 112 ‘அம்மா’ நகரும்நியாய விலைக் கடைகள் நேற்று தொடங்கி வைக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் ரூ.9 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 3,501 அம்மா நகரும் ரேஷன் கடை சேவையை முதல்வர் பழனிசாமி அண்மையில் தொடங்கி வைத்தார்.
இதில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு 112 கடைகள் ஒதுக்கப்பட்டன. இதன் தொடக்க விழா காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணிமங்கலம், வாலாஜாபாத் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருமணியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் பங்கேற்று, நகரும் ரேஷன் கடைகளை தொடங்கி வைத்தார். இதேபோல் வாலாஜாபாத் வட்டத்தில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மூலமாக 28 பயனாளிகளுக்கு ரூ.14.5 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் காஞ்சி ஆட்சியர் பொன்னையா, செங்கை ஆட்சியர் ஜான் லூயிஸ், கூட்டுறவு இணைப் பதிவாளர் காஞ்சிபுரம் மண்டலம் அக்கோ. சந்திரசேகர், கூட்டுறவு கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பலோகநாதன், பெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பழனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த நடமாடும் ரேஷன் கடைகள் மூலம், மாதம்ஒருமுறை குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில், கடையின் விற்பனையாளர் நேரில் சென்று அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடமாடும் கடை மூலம் எங்கு,எப்போது பொருட்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு அந்தந்த ரேஷன் கடைகளில் ஒட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.