Published : 25 Sep 2020 06:51 AM
Last Updated : 25 Sep 2020 06:51 AM

விபத்து வழக்குகளில் சிக்கும் காப்பீடு இல்லாத வாகனங்களை உடனே பறிமுதல் செய்ய வேண்டும்: காவல் துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

விபத்து வழக்குகளில் சிக்கும் காப்பீடு இல்லாத வாகனங்களை உடனே பறிமுதல் செய்ய வேண்டும்என்று காவல் துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலையில் கடந்த 2013-ம் ஆண்டு லாரி மோதியதில் விபத்தில் சிக்கிய சண்முகம் என்பவர் இழப்பீடு கோரிநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நாமக்கல் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான தீர்ப்பாயம் விசாரித்து, அவருக்கு இழப்பீடாக ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 100 வழங்க யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்சூரன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதில்,‘‘விபத்து நடந்து பல நாட்களுக்கு பிறகு, இழப்பீடு கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. விபத்து ஏற்படுத்திய லாரியின் பதிவு எண்போன்ற விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. இதை தீர்ப்பாயமும் கவனிக்க தவறிவிட்டது’’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தனது உத்தரவில் கூறியுள்ளதாவது:

விபத்து வழக்குகளில் முழு சான்று ஆவணங்களையும் தாக்கல்செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், தீர்ப்பாயங்கள் இதை கவனிக்க தவறிவிடுகின்றன. இதனால்தான் தவறான இழப்பீடுகள் கோரப்படுகின்றன.

விதிமீறி வாகனங்களை இயக்குவதால், சாலையில் நடந்து செல்வோரும் உயிரிழக்க நேரிடுகிறது. விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு தாமதமின்றி விரைவாக இழப்பீடுவழங்கப்பட வேண்டும். இதற்குவிபத்து ஆவணங்கள் விரைவாகதயாரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

2017-ல் டிஜிபி சுற்றறிக்கை

இதுதொடர்பாக தமிழக டிஜிபி கடந்த 2017-ம் ஆண்டு பிறப்பித்த சுற்றறிக்கையில், ‘‘விபத்து தொடர்பான ஆவணங்களை சிசிடிஎன்எஸ் எனப்படும் கிரைம் மற்றும் கிரிமினல் டிராக்கிங் நெட்வொர்க்கிங் சிஸ்டம் இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளார். ஆனால்,அதிகாரிகள் அதன்படி செயல்படுவது இல்லை. விபத்து நடந்தவுடன்எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்.அதன் பிறகு, விசாரணை நடத்தப்பட்டு இறுதி விசாரணை அறிக்கைதாக்கல் செய்யப்பட வேண்டும்.அதில் விபத்து தொடர்பான ஆவணங்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப விவரங்கள் ஆவணங்களுடன் முழுமையாக இடம்பெற வேண்டும்.

எனவே, விபத்து வழக்குகளுக்கான இறுதி அறிக்கையை சிசிடிஎன்எஸ் இணையதளத்தில் 90 நாட்களுக்குள் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இதை டிஜிபி உறுதிசெய்ய வேண்டும்.

டிஜிபியின் அறிவுறுத்தலை செயல்படுத்த தவறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்து வழக்குகளில் சிக்கும் காப்பீடு (இன்சூரன்ஸ்) இல்லாத வாகனங்களை அதிகாரிகள் எக்காரணம் கொண்டும் விடுவிக்கக் கூடாது. அவற்றை உடனே பறிமுதல் செய்ய வேண்டும்.

மருத்துவம், விபத்து தொடர்பான வழக்குகளுக்கான அறிக்கையை தனித்து தெரியும் விதமாக தனி நிறத்தில் பதிவிட்டு, அதையும் 7 நாட்களுக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு அரசு மருத்துவமனைகளுக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x