

உடுமலை அருகே விக்கிரம சோழன் காலத்தில் உருவாக்கப்பட்ட நந்தீஸ்வரர் கோயிலில் உள்ள கல்வெட்டுகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள சர்க்கார் கண்ணாடிபுத்தூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். முன்பு கரைவழி நாடுகள் வரிசையில் இப்பகுதியும் ஒன்றாக இருந்தது. அமராவதி ஆற்றங்கரையில் இரு இடங்களில் பழமை வாய்ந்த நந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இதே ஊரின் தெற்குப் பகுதியில் உள்ள கோயில் பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து உள்ளது. ஆனால், வடக்குப் பகுதியில் பழமைவாய்ந்த கோயில் இருந்த இடத்தில் கோயில் புனரமைக்கப்பட்டு, மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
ஆனால், இக்கோயிலின் தொன்மையை எதிர்கால தலைமுறையினர் அறிய உதவும் கல்வெட்டுகள் சிதிலமடைந்து வருகின்றன.
இது குறித்து கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து.சுந்தரம் கூறும்போது, “கல்வெட்டு ஆராய்ச்சியாளர் வீரராகவனுடன் சேர்ந்து கல்வெட்டுகளை படியெடுத்து ஆய்வு செய்தபோது, இது 700 ஆண்டுகளுக்கு முன் விக்கிரம சோழன் காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது. கல்வெட்டினை ‘அநந்தீசரமுடையார்’ என்றழைக் கப்பட்டுள்ளது.
சோழர் படையில் கோவன் வீரன் என்பவரால் படையல் வழிபாடு மேற்கொள்ளப் பட்டுள்ளது.
கைக்கோளப்படை வீரர் கோயிலுக்கு நன்கொடை அளித்துள்ளார். வணிகர்களால் அதிகளவில் வழிபாடு செய்யப்பட்டுள்ளது உட்பட பல்வேறு தகவல்கள் கல்வெட்டு மூலம் தெரிய வந்துள்ளது. ஆனால், அவை பராமரிப்பு இன்றி நடைபாதைக் கற்களாக பயன்படுத்தப்படுகின்றன. அதில், யானை, குதிரை, புலி போன்ற விலங்குகள் மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களின் படங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றை பாதுகாக்க வேண்டும் என கிராம மக்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.