Last Updated : 24 Sep, 2020 09:36 PM

 

Published : 24 Sep 2020 09:36 PM
Last Updated : 24 Sep 2020 09:36 PM

வேளாண் மசோதாவுக்கு எதிரான புதுச்சேரி முதல்வரின் போராட்டம் தவிர்க்கப்பட வேண்டியது: கிரண்பேடி கருத்து 

வேளாண் மசோதாவுக்கு எதிரான புதுச்சேரி முதல்வரின் போராட்டம் தவிர்க்கப்பட வேண்டியது என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கருத்துத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களை எதிர்த்து செப்டம்பர் 28-ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் போராட்டம் தொடங்கப்படும் என்று புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். போராட்டத்தைத் தவிர்க்க வேண்டும் என்று ஆளுநரிடம் அதிமுக எம்எல்ஏ அன்பழகன் இன்று மனு தந்திருந்தார்.

அதுபற்றித் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ் அப்பில் கூறும்போது, "எம்எல்ஏ சொல்வது சரிதான். கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் கூட்டுக் கடின உழைப்பைப் போராட்டம் குறைக்கும். கரோனா இறப்பு புதுச்சேரியில் அதிக அளவில் உள்ளது. கூட்டுப் பணிகளால் தற்போதுதான் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.

போராட்டங்களினால் கரோனா மீட்பு தொந்தரவுக்கு உள்ளாகும். அத்துடன் தீங்கும் விளையும். இது போராட்டத்துக்கான நேரமும் அல்ல. உண்மையில் இது கடும் கவலையை ஏற்படுத்துகிறது.

கரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக புதுச்சேரி கடன் வாங்குகிறது என்பதை மறந்துவிடக்கூடாது. இது பட்ஜெட்டிலும் எதிரொலிக்கும். இதனால் பொருளாதார இழப்பு மட்டுமில்லாமல் பொதுமக்களும் துன்பம் அடைய நேரிடும்.

இந்த நேரத்தில் இது தவிர்க்கப்பட வேண்டிய போராட்டம். இது தொடர்பான எம்எல்ஏவின் கருத்தில் உடன்படுகின்றேன். எம்எல்ஏவின் மற்ற ஆலோசனைகளைப் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x