Published : 24 Sep 2020 07:11 PM
Last Updated : 24 Sep 2020 07:11 PM

சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது அறிவிப்பு தள்ளிப்போவது ஏன்?- படைப்பாளிகள் கேள்வி

35 வயதுக்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் யுவ புரஸ்கார் விருது வழங்கிக் கவுரவித்து வருகிறது சாகித்ய அகாடமி. இதற்கிடையே நடப்பு ஆண்டுக்கான விருதுத் தேர்வுக்கு கடந்த ஆண்டே போட்டியாளர்களிடம் இருந்து புத்தகங்கள் பெறப்பட்ட நிலையில், இதுவரை யுவ புரஸ்கார் விருது பெற்றவர்களின் பட்டியல் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வந்திருப்பதால் நடப்பு ஆண்டுக்கான விருது என்ன ஆனது எனக் கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து தெற்கு எழுத்தாளர் இயக்கத்தின் தலைவரும், வழக்கறிஞருமான திருத்தமிழ் தேவனார் 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் கூறுகையில், ''சாகித்ய அகாடமி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் படைப்பாளிகளுக்கு விருது வழங்கி பணப்பரிசும், கேடயமும் வழங்குவார்கள். இதைப் பரிசு என்பதைவிட சாகித்ய அகாடமி சார்பில் கிடைக்கும் அங்கீகாரம் எனச் சொல்லலாம். சாகித்ய அகாடமியால் அங்கீகரிக்கப்பட்ட படைப்பாளிக்குத் தமிழக அளவில் அங்கீகாரம் கிடைக்கும். ஒரு படைப்பாளிக்கான ஊக்கமாக இது இருக்கும்.

ஆண்டுதோறும் பிரதானமான சாகித்ய அகாடமி விருது தேர்ந்த மூத்த படைப்பாளிக்கு வழங்கப்படுகிறது. இதேபோல் குழந்தைகள் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்யும் படைப்பாளிக்கு பால புரஸ்கார் விருதும், மொழிபெயர்ப்புத் துறையில் கவனம் குவிக்கும் படைப்பாளிகளுக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதும் வழங்கப்படுகிறது. அந்த வரிசையில் 35 வயதுக்குட்பட்ட படைப்பாளிகளுக்கு யுவ புரஸ்கார் விருது வழங்குவதும் வழக்கம். இந்த விருது பெற்றவர்களின் பட்டியல் ஜூன் மாதத்தில் தமிழ் உள்பட 24 மொழிகளுக்கும் அறிவிக்கப்படும்.

நடப்பு ஆண்டுக்கான விருதுக்குக் கடந்த ஆண்டே படைப்பாளிகளிடம் இருந்து புத்தகமும் பெற்று இருந்தனர். ஆனால், இந்த ஜூன் மாதத்தில் வந்திருக்கவேண்டிய 2020-ம் ஆண்டுக்கான யுவ புரஸ்கார் முடிவுகள் இதுவரை வரவில்லை. ஜூன் முடிந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில் இப்போது 2021-ம் ஆண்டு யுவ புரஸ்கார் விருதுக்காக படைப்புகளை அனுப்ப சாகித்ய அகாடமி அறிவிப்பு கொடுத்துள்ளது.

திருத்தமிழ் தேவனார்

வழக்கமாக விருது அறிவிக்கப்பட்ட பின்புதான் அடுத்த ஆண்டுக்கான படைப்புகளை அனுப்பச் சொல்வது வழக்கம். ஆனால், இம்முறை நடப்பு ஆண்டுக்கான விருது அறிவிக்காமலே அடுத்த ஆண்டுக்கான படைப்புகள் கோரப்பட்டுள்ளன. கரோனா காலத்தால் படைப்புகளை நடுவர் குழுவுக்கு அனுப்ப முடியாமல் போனதா? அதனால் வருட இறுதியில் பிரதானமான சாகித்ய அகாடமி விருதுப் பட்டியல் அறிவிக்கப்படும்போது, யுவ புரஸ்கார் விருதும் சேர்த்தே அறிவிக்கப்படுமா என்று தெரியவில்லை.

இதுகுறித்து சாகித்ய அகாடமி தரப்பிலிருந்து விளக்கினால்தான் தெரியும். அனைத்தும் கணினி மயமாகிவிட்ட இந்தச் சூழலில் மின்னிதழாகவும் படைப்புகளைப் பெறும் அளவுக்கு சாகித்ய அகாடமியும் தன்னை நவீனப்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்றார்.

குழந்தை இலக்கியத்துக்காக இந்த ஆண்டு வழங்கப்படும் பால புரஸ்கார் விருது பெற்றவர்கள் குறித்த அறிவிப்பும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x