Published : 10 Sep 2015 05:57 PM
Last Updated : 10 Sep 2015 05:57 PM

அதிமுகவின் 2016-க்கான தேர்தல் விளம்பரம்தான் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: கருணாநிதி

'2016 தேர்தல் விளம்பரத்திற்காக கடைசி நேரத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டால் சாதிக்கப் போகிறோம் என்று சவடால் பேசுவது, எந்த அளவுக்குச் சாத்தியமாகி நல்ல விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது?' என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட கடித வடிவ அறிக்கையில், ''தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பது என்று கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. அதைப் போல நான்காண்டு காலமாக நன்றாகத் தூங்கிவிட்டு, தற்போது திடீரென்று தூக்கம் கலைந்து விழித்தெழுந்து, சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டைக் கூட்டி முதலீடுகளைக் குவிக்கப் போவதாக அறிவித்துக் கொண்டு, ஏதோ ஒரு நாடகத்தை நடத்தியிருக்கிறார்கள்.

அந்த மாநாட்டைப் பற்றி எழுதியுள்ள அனைத்து நாளேடுகளும், அந்த மாநாட்டையொட்டி அதிமுகவினர் நடத்திய குத்தாட்டம் குறித்தும், நகரம் முழுவதும் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் முணுமுணுப்பு குறித்தும் எழுதத் தவறவில்லை.

அதிமுக ஆட்சியினர் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இது போல முதலீட்டாளர்களையெல்லாம் அழைத்து பல நூறு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டு விட்டது, பல நூறு பேருக்கு வேலைவாய்ப்பு என்றெல்லாம் ஒரு பெரிய விளம்பரம் செய்தார்கள். ஆனால் முதலீடும் வரவில்லை; வேலை வாய்ப்பும் ஏற்படவில்லை. அப்போது போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களே உருப்படியாக நிறைவேற வில்லை என்கிற போது, அதிமுக ஆட்சியினர் போகிற போக்கில் போடுகின்ற ஒப்பந்தங்களுக்கு ஏதாவது மதிப்பு இருக்கப் போகிறதா என்ன?

அதனால் இப்போது வந்திருக்கும் தொழில் முதலீட்டாளர்கள் கூட மிகுந்த எச்சரிக்கையாகவும் கவனமாகவும் அடுத்த மூன்றாண்டுகளில் இவ்வளவு கோடி ரூபாய் முதலீடு செய்யப் போகிறோம், அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் இவ்வளவு கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

தற்போது நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர் மாநாட் டிற்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் முதலீட்டாளர்கள் வந்திருப்பதாக விளம்பரப்படுத்தியும் கூட தொடக்க விழாவின் போது அன்னிய முதலீட்டாளர் எவரும் பேசியதாகத் தெரியவில்லை. தொழில் முதலீடு குறித்து அதிமுக ஆட்சியினர் கடந்த நான்கரை ஆண்டுக் காலத்தில் என்ன செய்தார்கள், அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுகிறேன்.

கடந்த ஆண்டு 13-2-2014 அன்று தமிழகச் சட்டப் பேரவையில், அதிமுக அரசின் சார்பாக நிதிநிலை அறிக்கையைப் படித்த ஓ.பன்னீர்செல்வம், அந்த அறிக்கையின் பக்கம் 31-ல் “நமது மாநிலத்தில் தொழில் வளத்தையும் கட்டமைப்பையும் மேலும் ஊக்குவிக்க இந்த அரசு, வரும் அக்டோபர் மாதத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தும் என்பதை இந்த மாமன்றத்திற்கு மகிழ்ச்சியோடு தெரிவிக்க விரும்புகிறேன். இதற்காக இந்த வரவு செலவுத் திட்டத்தில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று படித்தார்.

இது சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையில் படித்த அறிவிப்பு! ஆனால் அமைச்சர் பேரவையில் படித்தபடி அக்டோபர் மாதத்தில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றதா என்றால் அதுதான் இல்லவே இல்லை. நிதிநிலை அறிக்கையிலே கூறப்பட்ட அறிவிப்புக்கே இந்த கதி!

இது பற்றிக் கேட்டால், 2012ஆம் ஆண்டிலேயே ஒரு முறை ஒரே நாளில் 12 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதாகவும், அதன் மூலம் 36,855 பேருக்கு வேலை கிடைக்குமென்றும், 20 ஆயிரத்து 925 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலைகள் தொடங்குமென்றும் பூதாகாரமாக அறிவிப்பு செய்தார்களே, மீண்டும் ஒருமுறை 5,081 கோடி ரூபாய்க்கு 16 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது என்று அறிவித்தார்களே; அந்த அறிவிப்புகள் எல்லாம் என்ன ஆயிற்று? காற்றோடு கலந்து விட்டன.

குறிப்பிட்டபடி 12 நிறுவனங்களும் தொழிற்சாலைகளைத் தொடங்கினவா? உறுதியளிக்கப்பட்ட முதலீடு வந்ததா? அதற்குப் பிறகு, ஏற்கெனவே செய்த அறிவிப்புகளையெல்லாம் மறந்து 26,625 கோடி ரூபாய் அளவிற்கு மொத்த முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத் திடப்பட்டு, அதன் தொடர்ச்சியாக 10,660 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும், இதனால் 10,022 பேருக்கு கூடுதல் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் புதிதாகத் தெரிவித்தார்கள்.

அதன் பிறகு, 2015ஆம் ஆண்டு மே மாதத்தில் முதலீட் டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று பன்னீர்செல்வம் அறிவித்தார். அதுவாவது நடைபெற்றதா என்றால் இல்லை. முதலமைச்சர் ஜெயலலிதா கோவையில் பேசும் போது, அவருடைய மூன்றாண்டு கால ஆட்சியில் 33 இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் 31,706 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல நிறுவனங்களுடன் போடலாம்; உண்மையில் தொழில்கள் தொடங்கப்பட்டால்தானே மாநிலத்துக்குப் பலன் ஏற்படும்! உண்மை நிலை என்ன?

தமிழகத்தில் நடந்து வந்த “ஃபாக்ஸ்கான்” தொழிற் சாலை, மராட்டிய மாநிலத்திற்குச் செல்ல அங்கே 32 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டிருக்கின்றது. ஏற்கெனவே தமிழகத்தில் நடைபெற்று வந்த தொழில்களாவது தக்க வைக்கப்பட்டனவா? தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனமும், மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் நிறுவனமும் மூடப்படும் நிலையில் இருக்கின்றன.

தமிழ்நாடு பெட்ரோ-ப்ராடக்ட்ஸ் நிறுவனம், திருச்சி டிஸ்டிலரீஸ் நிறுவனம், தூத்துக்குடி அல்கலின் கெமிகல்ஸ் நிறுவனம் ஆகியவை ஏற்கெனவே மூடப்பட்டு விட்டன. பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் மூன்றாண்டு களுக்கு முன்பே பணிகள் தொடங்கப்பட்ட கடலூர், நாகார்ஜுனா பெட்ரோ கெமிகல் தொழில் வளாகம் எப்போது உற்பத்தி தொடங்கும் என்றே தெரியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. பஞ்சாலைத் தொழில் பல பிரச்சினைகளினால் நலிந்து வருகிறது. பட்டாசு தயாரிக்கும் தொழில் மறைமுக ஆக்கிரமிப்பினால் நசுங்கிக் கொண்டிருக்கிறது. கைத்தறி - விசைத்தறித் தொழில் சுருங்கிச் சுருண்டு கொண்டிருக்கிறது. பொய் நெல்லைக் குத்திப் பொங்க நினைத்து, கை நெல்லை விட்ட கதைதான், தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது!

மே மாதம் நடக்கவிருந்த இந்த மாநாட்டையொட்டி 13-2-2015 அன்று சென்னையில் நடைபெற்ற முன்னோட்ட மாநாட்டில் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏழு நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று மிகப் பெரிய விளம்பரம் செய்தார்களே தவிர அங்கே அந்த நிகழ்ச்சியே அந்த முன்னோட்ட மாநாட்டில் நடைபெறவில்லை .

தமிழக அரசின் தொழில் அமைச்சர் “குறைந்த விலைக்கு நிலம் தருகிறோம், வரிச் சலுகையும் தருகிறோம் என்று சொல்லி, ஆந்திர மாநிலத்திற்கு அழைக்கிறார்கள். அது போல ஆந்திர முதல்வர் இந்த வழியாகச் சென்னைக்கு வந்து செல்லும் போதெல்லாம் நம் தொழிலதிபர்களை அழைத்து குறைந்த விலைக்கு நிலம் தருகிறோம் என்று பேசுவார்” என்று வெளிப்படையாகவே கூறினார்.

அதிலிருந்தே தமிழகத்தின் நிலைமை என்ன என்று அப்போதே தெரிந்து விட்டது. இவர்கள் ஆளுகின்ற ஒரு மாநிலத்திற்கு வேறொரு மாநில முதலமைச்சர் வந்து கூட்டம் போட்டு தொழில் முதலீட்டாளர்களுக்கு நேரடியாகவே அழைப்பு விடுக்கிறார்கள் என்றால், அதற்காக இந்த ஆட்சியினர் வெட்கப் படத்தான் வேண்டும்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் தமிழகத்தில் முதலீடு செய்வது குறித்து, அந்நாட்டு வர்த்தகத் துறை அமைச்சருடனும், அதைப்போல தமிழகத்தில் மேலும் முதலீடு செய்வது குறித்து அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தின் கவர்னருடனும் பன்னீர்செல்வம் பேச்சு வார்த்தை நடத்தியதாக ஒரு செய்தி வந்தது. அதுவும் என்னவாயிற்று என்று தெரியவில்லை.

சர்வதேச முதலீட்டாளர் மாநாடு மே மாதம் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவித்து, முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக வெளி நாட்டினரைக் கவர்ந்திழுக்கச் செல்வதாக ஒரு பிரச்சாரம் செய்யப்பட்டு, அதற்காக அதிகாரிகள் எல்லாம் வெளிநாடு களுக்குப் படையெடுத்த செய்தியும் வந்தது.

தமிழக அரசின் தொழில் அமைச்சர் சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழில் அதிபர்கள் வர உள்ளதாகவும், அதன் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் தமிழகத்திலே முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். அவர் அவ்வாறு அறிவித்த ஒரு சில நாட்களிலேயே முதலீட்டாளர்கள் மாநாடு மேலும் தள்ளி வைக்கப்படுவ தாக அரசினால் அறிவிக்கப்பட்டது.

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளூர் தொழில் அதிபர்களை அழைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்று சேலத்தில் நடைபெற்றதாகவும், அந்தக் கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், தொழில் துறையின் சிறப்புச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டதாகவும், அதிலே அமைச்சர்கள் பேசியபோது மே மாதத்தில் மாநாடு நடைபெறும் என்று பேசினார். ஆனால் அவர்களுக்குத் தெரியாமலேயே, மாநாடு ஒத்தி வைக்கப்பட்டு செப்டம்பரிலே நடைபெறும் என்று சென்னையில் அறிவிப்பு வந்தது.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எவ்வாறு செயல்படுத்தப் படப்போகின்றன? எப்போது அவை செயலாக்கத்திற்கு வரும்? அதற்கான கால நிர்ணயம் ஏதும் செய்யப்பட்டிருக்கிறதா? புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத் திடும் தமிழக அரசும், முதலீட்டாளர்களும், அவர்கள் வழங்கிடும் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான அடிப்படை ஆதாரங்களைப் பெற்றுள்ளார்களா? அரசின் தொழிற் கொள்கையும், அரசு அதிகாரிகளும் தொழில் திட்டங்களைச் சிறிதும் தாமதிக்காமல் செயலாக்கத்திற்கு அனுமதித்து ஒத்துழைப்பார்களா? என்ற கேள்விகள், செய்திகளைப் படிக்கும் அனைவருடைய மனதிலும் எழுவது இயற்கையே!

இவற்றில் முக்கியமான கேள்வி, கையெழுத்திடப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் எத்தனை ஒப்பந்தங்கள் உண்மையிலேயே செயலாக்கத்திற்கு வரப்போகின்றன என்பதுதான்! இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுவதற்கு முன் தொழில் முதலீடுகள் சம்மந்தமாகத் தமிழகத்தில் கடந்த நான்காண்டுகளில் எத்தகைய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொண்டாக வேண்டும்.

2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் 73,298 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டன. ஆனால் அவற்றுள் வெறும் 235 கோடி ரூபாய் முதலீடு மட்டுமே தமிழகத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது. உண்மையில் வந்து சேர்ந்த முதலீடு 0.3 சதவிகிதம்தான் என்பதை அறிய அனைவரும் வெட்கப்பட வேண்டும்!

2012ஆம் ஆண்டில் 21,253 கோடி ரூபாய் முதலீட்டுக் கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ஆனால் 524 கோடி ரூபாய் முதலீடு மட்டுமே செயலாக் கத்துக்கு வந்திருக்கிறது. செயலாக்கத்துக்கு வந்துள்ள முதலீடு 2.4 சதவீதம் மட்டுமே.

2013ஆம் ஆண்டில் 27,380 கோடி ரூபாய் முதலீட் டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, 2292 கோடி ரூபாய் முதலீடு மட்டுமே வந்திருக்கிறது. செயலாக்கத்துக்கு வந்துள்ள முதலீடு 8.3 சதவீதம்தான்.

2014ஆம் ஆண்டில் 14,596 கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, 2500 கோடி ரூபாய் முதலீடு மட்டுமே தமிழகத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது. செயலாக்கத்துக்கு வந்திருக்கும் முதலீடு 17 சதவீதம்தான்.

2015ஆம் ஆண்டில் ஜூலை மாதம் வரை 17,412 கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, வெறும் 41 கோடி ரூபாய் முதலீட்டுக்கான பணிகள் மட்டுமே நிறைவேறியிருக்கின்றன. செயலாக்கத்துக்கு வந்திருக்கும் முதலீடு வெறும் 0.2 சதவீதம் தான் என்பது எவரையும் தலை குனிய வைப்பதாகும்.

ஆக அதிமுக ஆட்சியில் 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை செயலாக்கத்துக்கு வந்துள்ள முதலீடு வெறும் 5.64 சதவீதம்தான். இவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்படும் முதலீடுகளின் அளவுக்கும், உண்மையிலேயே செயலாக்கத்துக்கு வரும் முதலீடுகளின் அளவுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருப்பதற்கு, மின்சாரம், தண்ணீர், போக்குவரத்து வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு தேவையான அளவுக்கும் தரத்திற்கும் இல்லாததும், அரசின் தொழில் கொள்கையும் - அதிகார அமைப்பும் தொழில் முதலீட்டாளர் களுக்கு அனுசரணையான அணுகுமுறையினைக் கையாளாததும்தான்.

கடந்த நான்கரை ஆண்டுகளாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு உகந்த முறையெதையும் பின்பற்றாமல், முதலீடுகளை ஈர்ப்பதில் மிகப் பெரிய தோல்வி ஏற்பட்ட பிறகு, 2016 தேர்தல் விளம்பரத்திற்காக கடைசி நேரத்தில் சாதிக்கப் போகிறோம் என்று சவடால் பேசுவது எந்த அளவுக்குச் சாத்தியமாகி நல்ல விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது?'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x