

தூத்துக்குடி மாவட்டம் சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு பகுதியில் லக்னோவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் நேரில் ஆய்வு செய்து, மாதிரிகளை சேகரித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் கடந்த மே 25-ம் தேதி மாநில தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணி தொடங்கியது.
இதுவரை ஆதிச்சநல்லூரில் 24 முதுமக்கள் தாழிகள், எலும்பு, தமிழ் பிராமி எழுத்துக்களும், சிவகளை அகழாய்வு பணியில் தற்போது வரை 31 முதுமக்கள் தாழிகள், அரிசி, நெல்மணிகள், எலும்பு, பற்கள் என பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள. இரு இடங்களிலும் தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த பொருட்களை நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன. அந்த வகையில் பூமி சார்பியல் மதிப்பாய்வுக்காக திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைகழகம் சார்பாக லக்னோ பழைய பீர்பால் ஆய்வு மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் மொர்த்தகாய் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஒளி உமிழ்வு மூலமாக காலகட்டத்தை ஆய்வு செய்வதில் வல்லுநர் ஆவர்.
இவர் சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகள் மற்றும் மணல்களில் இருந்து ஆய்வுக்காக மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழ்நாடு அகழ்வாராய்ச்சி நிறுவனமும், திருவாரூர் மத்திய பல்கலைகழகமும் இணைந்து புவி சார்பியல் சம்பந்தமான ஆய்வுகளை செய்து வருகிறது. திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைகழக ஆய்வாளர் ஜெயகொண்ட பெருமாள் தலைமையில் லக்னோ பழைய பீர்பால் அறிவியல் ஆய்வு மையம் சார்பில் ஆய்வு செய்ய நான் வந்துள்ளேன்.
சிவகளை பரம்பு பகுதி மற்றும் ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் கிடைத்த பொருட்களை சேகரித்து ஒளி உமிர்வு சோதனை மூலம் அவைகளின் காலத்தை கணிக்க முடியும்.
அதற்காக மணல் மாதிரி, புதைந்த தாழிகள் மற்றும் ஓடுகளை சேகரித்து ஆய்வு செய்ய உள்ளோம். கொடுமணல், கீழடி போன்ற இடங்களிலும் தொடர்ந்து ஆய்வு நடத்தவுள்ளோம் என்றார் அவர்.