

வேலூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருந்த ரூ.11 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக திமுக பிரமுகரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டார். தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்ற புகாரின்பேரில் கடந்த ஆண்டு மார்ச் 29-ம் தேதி இரவு தொடங்கி மறுநாள் (மார்ச் 30) வரை துரைமுருகனின் வீடு மற்றும் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், துரைமுருகன் வீட்டில் இருந்து 10 லட்சத்து 57 ஆயிரத்து 10 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.11.51 கோடி பணம் பறிமுதல்
இதற்கிடையில், கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சென்னையில் இருந்து துணை ராணுவப்படை பாதுகாப்புடன் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் துரைமுருகனின் நெருங்கிய கட்சிப் பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசனின் வீடு மற்றும் அவரது உறவினருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோன் உள்ளிட்ட 6 இடங்களில் மீண்டும் நடத்திய சோதனையில் மூட்டை மூட்டையாகவும் பெட்டி பெட்டியாகவும் 11 கோடியே 51 லட்சத்து 800 ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர்.
அப்போது, வேலூர் மக்களவைத் தொகுதி வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் விவரங்களுடன் கூடிய ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் சுமார் ரூ.9 கோடி அளவுக்கு புத்தம் புதிய 200 ரூபாய் நோட்டுகள் இருந்தன. தேர்தல் நேரத்தில் புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள் காட்பாடி காந்தி நகரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் இருந்து பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது.
வழக்குப் பதிவு
வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக காட்பாடி காவல் நிலையத்தில் தேர்தல் செலவுக் கணக்கு அதிகாரி முத்து சிலுப்பன் அளித்த புகாரின்பேரில் கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. முறைகேடாகப் பணம் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் பூஞ்சோலை சீனிவாசனிடம் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிபிஐ திடீர் விசாரணை
பூஞ்சோலை சீனிவாசனுக்குப் புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள் எப்படிக் கைமாறின என்றும் இதில், தொடர்புடையவர்கள் யார்? என்பது குறித்தும் விசாரிக்க வருமான வரித்துறையினர் பரிந்துரையின் பேரில் சிபிஐ அதிகாரிகள் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
இதன் ஒரு பகுதியாக பூஞ்சோலை சீனிவாசனிடம் சென்னையில் இருந்து வந்த சிபிஐ இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் இன்று (செப். 24) விசாரணை நடத்தியுள்ளனர். சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற விசாரணையின்போது சில முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்ததுடன் விசாரணைக்கு வரவேண்டும் என்ற சம்மனை வழங்கிச் சென்றதாக பூஞ்சோலை சீனிவாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.