

அகழாய்வுப் பணிகள் நடைபெறும் கிராமங்களில் மணல் அள்ள தடை விதிக்கக்கோரிய வழக்கில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மணலூரைச் சேர்ந்த மகேஷ் ராஜா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
சிவகங்கை மாவட்டம் வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் கிராமங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெறுகின்றன. இப்பகுதியில் கீழடி உட்பட பல இடங்களில் சங்க காலம் மக்கள் நாகரீகமாக வாழ்ந்ததற்கு பல்வேறு ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன.
இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள், பழங்கால பொருட்கள் 6-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது.
பொதுவாக அகழாய்வு பணிகள் நடைபெறும் இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவிற்கு அப்பால் குடிமராமத்து பணிகள் நடைபெற வேண்டும். இந்த விதியை பின்பற்றாமல் அகழாழ்வு பணிகள் நடைபெறும் அருகாமையில் உள்ள விவசாய நிலங்களில் சவடு மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதியை வைத்துக் கொண்டு விவசாய நிலங்களில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுகிறது. குடிமராமத்து பணிகள் நடைபெறுவதாக கூறி அரசை ஏமாற்றி மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதனால் தொல்லியல் ஆய்வுகள் பாதிக்கப்படுவதுடன் விவசாயமும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே மணல் அள்ள தடை விதிக்க வேண்டும். ஏற்கெனவே வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன்,ராஜமாணிக்கம் அமர்வு விசாரித்து, மனு தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் புகைப்படத்துடன் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அக். 13-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.