தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை: எல்.கே.சுதீஷிடம் ரஜினிகாந்த் தொலைபேசியில் நலம் விசாரிப்பு

கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
1 min read

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் நலம் விசாரித்ததாக எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "விஜயகாந்துக்கு கோவிட்-19 சோதனையில் கரோனா தொற்று இருப்பது செப்.22 அன்று உறுதி செய்யப்பட்டது. தற்போது, அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அவரது உடல்நிலை சீராக இருக்கிறது.

அவர் கூடிய விரைவில் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு லேசான கரோனாஅறிகுறி தென்பட்டதாகவும், தற்போது அவர் பூரண உடல்நலத்துடன் உள்ளதாகவும் தேமுதிக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விஜயகாந்த் நலம்பெற முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷை செல்போனில் தொடர்புகொண்ட நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்த் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார். விஜயகாந்த் விரைவில் நலம் பெற்று வரவேண்டும், அவரது உடல்நிலை குறித்த தகவல்களை உடனுக்குடன் தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என ரஜினி கேட்டுக்கொண்டதாக சுதீஷ் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று தெலங்கானா ஆளுநர் தமிழிசையும் விஜயகாந்த் நலம் பெற வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in