

இரு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக ஒன்றரை ஆண்டாக காத்திருக்கும் சிவகங்கை நபருக்கு ஒரே நாளில் அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தைச் சேர்ந்த சைபுல்லாகான், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
எனக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்ந்தேன். சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் எனக்கு சிறுநீரக தானம் செய்ய முன்வந்துள்ளார். மருத்துவப் பரிசோதனையில் அந்த பெண்ணின் சிறுநீரகம் எனக்கு பொருந்தும் என முடிவானது.
இதையடுத்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அரசு அமைத்துள்ள குழுவிடம் முன் அனுமதி பெற வேண்டும். தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள அங்கீகார குழுவிடம் அனுமதி பெற வேண்டும்.
அதன்படி மதுரையில் உள்ள அங்கீகார குழுவிடம் மருத்துவமனை சார்பில் அனுமதி கோரப்பட்டது. இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. எனவே எனக்கு சிறுநீரக மாற்று அறுவை மேற்கொள்ள அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருச்சி தனியார் மருத்துவமனை மனுதாரரின் அறுவை சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள அங்கீகாரக் குழுவிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
செப். 25-ல் அந்தக்குழு முன்பு மனுதாரரும், சிறுநீரக தானம் வழங்கும் பெண்ணும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். மருத்துவக்குழு இருவரிடம் விசாரித்து மனுதாரரின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு அன்றே அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
பின்னர் விசாரணை செப். 28க்கு நீதிபதி தள்ளி வைத்தார்