

வேளாண் மசோதாக்களை எதிர்த்து வரும் 28-ல் போராட்டத்தை அறிவித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புதுச்சேரி அதிமுக கடிதம் அனுப்பியுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவை அதிமுக தலைவர் அன்பழகன் எம்எல்ஏ, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு இன்று (செப். 24) அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
"நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண்மைத் துறை மசோதாக்களை எதிர்த்து செப்டம்பர் 28-ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் போராட்டம் தொடங்கப்படும் என்று புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். இது மக்களின் மனதைத் தடுமாற்றம் அடையச் செய்யக்கூடிய செயல் ஆகும்.
புதுச்சேரி தொற்று நோய்களின் பிடியில் இருக்கும்போது, அதுவும் ஒரு முதல்வரால் எப்படி ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்ய முடியும் என்று மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
தற்போதைய கரோனா காலகட்டத்தில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் அல்லது வேறு எந்தவிதமான போராட்டங்களையும் நடத்தக்கூடாது என்று இந்திய அரசு ஏற்கெனவே தனது வழிகாட்டுதல்கள் மூலம் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது. மக்களைக் கூட்டம் கூடச்செய்வது கரோனா தொற்று வேகமாகப் பரப்புவதற்கான மிகச்சிறந்த வாய்ப்பை வழங்கும்.
இதுபோன்ற நிலையில் காங்கிரஸ், திமுக தலைமையிலான கூட்டணி வேளாண் மசோதாக்களை எதிர்த்துப் போராட்டத்தை நடத்தும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். இது அரசியல் நோக்கம் கொண்டது. மேலும், இதன் மூலம் கரோனா தொற்றுநோய் பரவுவதற்கான வாய்ப்பையும் முதல்வர் ஏற்படுத்துகின்றார்.
மக்களின் ஆரோக்கியத்திற்காக இவ்விஷயத்தில் துணைநிலை ஆளுநர் தலையிட்டு பேரழிவு மேலாண்மைச் சட்டம் 2005 மற்றும் தொற்றுநோய்கள் சட்டம் 1897 ஆகியவற்றின் கீழ் முதல்வர் நாராயணசாமிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அதிகாரம் கொண்ட மத்திய உள்துறை அமைச்சகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டத்தை அறிவித்த முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
மாநில அளவிலான பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக இருக்கும் முதல்வர், பேரிடர் மேலாண்மைச் சட்டம் மற்றும் தொற்றுநோய்கள் சட்டத்தின் விதிகளை மீறி போராட்டத்தில் பங்கேற்க உள்ளார். அரசியலுக்காக நடத்தப்படவுள்ள இந்தப் போராட்டத்தின் மூலம் மக்கள் தவறாக வழிநடத்தப்படுவார்கள். மக்களின் ஆரோக்கியத்திற்காக இந்தப் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தலையிட்டுத் தடுக்க வேண்டும்".
இவ்வாறு புதுச்சேரி சட்டப்பேரவை அதிமுக தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.