

மத்திய அரசின் வேளாண் மசோதாவை எதிர்த்து பழநியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நடைபெற்ற சட்ட நகல் கிழித்து எரிக்கும் போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயப் விளைபொருட்கள் வர்த்தக மசோதா, விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசி ப் பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய 3 வேளாண் மசோதாக்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் வேளாண் மசோதாவைக் கண்டித்து பல்வேறு எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதன் ஒருபகுதியாக திண்டுக்கல் மாவட்டம் பழநியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து தபால்நிலையத்தை முற்றுகையிட்டு சட்ட நகலை கிழித்து எரிந்தனர். அப்போது தபால் நிலையத்தை சுற்றி பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீஸார் போராட்டக்காரர்களை தடுத்தனர்.
இதில் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட முப்பதுக்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட சம்பவத்தால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.