Published : 24 Sep 2020 01:14 PM
Last Updated : 24 Sep 2020 01:14 PM

மதுரைக்கு பெரியாறு குடிநீர் வருமா?- ஆமை வேகத்தில் நடக்கும் ரூ.1295 கோடி கூட்டுக்குடிநீர் திட்டம்

ரூ.1295 கோடி முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் ஆமை வேகத்தில் நடப்பதால் இந்தத் திட்டத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் நீண்ட கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி 100 வார்டுகளுக்கு முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தை நேரடியாக கொண்டுவருவதற்கு ரூ.1,295.76 கோடியில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இதற்காக, முல்லைப்பெரியாறு அணை அருகே லோயர் கேம்பில் தடுப்பணை அமைக்கப்படுகிறது. அங்கிருந்து எடுக்கப்படும் சுத்திக்கரிக்கப்படாத குடிநீர் தேனி மாவட்டம் பன்னைப்பட்டிக்கு கொண்டு வந்து அங்கு அமைக்கப்படும் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படுகிறது.

இதற்காக, அங்கு பிரம்மாண்டமான சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தொடங்கி நடக்கிறது. பன்னைப்பட்டியில் சுத்திகரிக்கப்படும் குடிநீர், மதுரை மாநகராட்சிக்கு குழாய்கள் மூலம் கொண்டு வந்து 100 வார்டுகளில் உள்ள 37 மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் ஏற்றப்படுகிறது.

இங்கிருந்து வார்டுகளுக்கு முல்லைப்பெரியாறு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்தத் திட்டம் 2021-ம் ஆண்டிற்குள் முடிக்க ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டது. ஆனால், நிதி ஒதுக்கீடு, டெண்டர் விடுவதில் தாமதம் ஏற்பட்டது.

அதன்பிறகு டெண்டர் விடப்பட்ட நிலையில் தற்போது வரை பன்னைப்பட்டியில் சுத்திகரிக்கப்பு நிலையம் அமைக்கும் பணி மட்டுமே நடக்கிறது. மற்றப்பணிகள் எதுவும் இன்னும் தொடங்கவில்லை.

இதேநிலை நீடித்ததால் 2025-ம் ஆண்டானாலும் இந்த திட்டம் நிறைவடைய வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. அதனால், மாநகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை நிரந்தரமாகவே நீடிக்கிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘லோயர் கேம்ப் தடுப்பணையில் இருந்து பன்னைப்பட்டிக்கு 85 கி.மீ. குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. பன்னைப்பட்டியிலிருந்து மதுரை மாநகராட்சிக்கு 60 கி.மீ., தொலைவு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது.

இந்தத் திட்டப்பணிகள் பகுதி-1, பகுதி-2, பகுதி-3, பகுபதி-4 என திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வரை பகுதி-2 சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி மட்டுமே நடக்கிறது. கரோனால் 6 மாதம் இப்பணிகள் தாமதம் ஏற்பட்டுள்ளது.

15 வார்டுகளில் பெரியாறு குடிநீர் திட்ட விநியோக குழாய்கள் அமைக்கும் பணி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்பணிகள் தொடங்கப்பட உள்ளது.

மற்ற 37 வார்டுகளில் குடிநீர் விநியோக குழாய்கள் பதிக்க நிதி ஒதுக்கீடு பெறுவதற்கு ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதலுக்கு காத்திருக்கிறது. மீதமுள்ள வார்டுகளில் குடிநீர் விநியோக குழாய்கள் அமைக்க திட்டம் தயார் செய்யும் பணிகள் நடக்கிறது.

அதனால், பெரியாறு திட்டப்பணிகளைத் தொடங்கினால் அடுத்த 30 மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம், ’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x