

வேளச்சேரி அதிமுக பிரமுகர் இல்ல நிகழ்ச்சி பேனர் விழுந்து உயிரிழந்த மாணவி சுபஸ்ரீயின் பெற்றோர் திமுக தலைவர் ஸ்டாலினை இன்று சந்தித்தனர். ஓராண்டு நினைவு தினம் முடிந்த நிலையில், தங்களது மகள் உயிரிழப்புக்கான சட்டப்போராட்டத்துக்கு உதவியதற்காக நன்றி தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு செப் 12-ம் தேதி, சென்னை, கோவிலம்பாக்கம் திருமண மண்டபத்தில் நடந்த அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்காக அதிமுக பிரமுகர்களை வரவேற்க துரைப்பாக்கம் வேளச்சேரி 200 அடி ரேடியல் சாலையின் இருபுறமும் பேனர்கள், சாலைத் தடுப்புகளில் வரிசையாக கட்டப்பட்டிருந்தன.
இந்த பேனரில் ஒன்று அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ மீது விழ, அவர் நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் லாரியில் சிக்கி உயிரிழந்தார். ஒரு வாரத்தில் கனடாவுக்கு மேற்படிப்புக்காக செல்லவிருந்த நிலையில் சுபஸ்ரீ விபத்தில் பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயர் நீதிமன்றம் இவ்வழக்கை எடுத்து கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தது. இந்த விவகாரத்தில் பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் நீண்ட தேடலுக்குப்பின் கைது செய்யப்பட்டார்.
சுபஸ்ரீ உயிரிழப்பு குறித்த வழக்கு நீதிபதி சத்திய நாராயணன் அமர்வில் விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான நீதிபதிகள் அமர்வு, "அரசு அதிகாரிகள், மனித ரத்தத்தை உறிஞ்சும் நபர்களாக மாறிவிட்டனர். இன்னும் எவ்வளவு ரத்தம் தான் உங்களுக்குத் தேவைப்படும்?
எந்தவொரு உத்தரவையும் அரசு அதிகாரிகள் மதிப்பதில்லை. தலைமைச் செயலகத்தை மட்டும்தான் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றவில்லை. நாங்களே எல்லா உத்தரவுகளையும் பிறப்பிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? அரசு உத்தரவுகளை நாங்கள் ஏற்று நடத்த முடியாது” எனத் தெரிவித்தது.
“அரசியல் கட்சிகள் பேனர் வைக்கக்கூடாது என்ற முடிவை முன்னரே எடுத்திருந்தால் ஒரு உயிர் பலியாகி இருக்காது. விவாகரத்திற்கு மட்டும்தான் தற்போது பேனர் வைப்பதில்லை. மற்றபடி எல்ல நிகழ்வுகளுக்கும் பேனர் வைக்கும் கலாச்சாரம் உள்ளது” என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
மாநகராட்சி மற்றும் காவல்துறையினர் கடமையைச் செய்யத் தவறியுள்ளனர். உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரு மனித உயிர் பறிபோயிருக்காது. விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மற்றும் விதிமீறலைத் தடுக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கையும் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும். மாநகராட்சி ஆணையர் அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் சுபஸ்ரீ மரணம் குறித்த வழக்கில் உயர் நீதிமன்றம் மிகுந்த கவனம் செலுத்தியது. பாதிக்கப்பட்ட சுபஸ்ரீக்கு ஆதரவாகவும், பேனர் வைப்பது குறித்த உரிய உத்தரவை பிறப்பிக்க கோரியும் திமுக சட்டக்குழு வாதாடியது.
கடந்த ஆண்டு செப்.12-ம் தேதி சுபஸ்ரீ உயிரிழந்தார். அதிமுக பேனர் விபத்தினால் உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு நீதிமன்றம் மூலம் ரூ.20 லட்சம் நிவாரணத்தொகையை திமுக சட்டக்குழு வாதாடி பெற்றுத்தந்தது. தங்களுக்கு நேரில் வந்து ஆறுதல் தெரிவித்து, நிதி அளித்து, சட்டப்போராட்டத்திற்கு துணை நின்ற திமுக தலைவர் ஸ்டாலினை சுபஸ்ரீயின் பெற்றோர் ரவி-லலிதா ஆகியோர் இன்று நேரில் சந்தித்து நன்றி் தெரிவித்தனர்.
இதுகுறித்து திமுக வெளியிட்ட பத்திரிக்கைச் செய்திக்குறிப்பு வருமாறு:
வேளச்சேரி பகுதியில் அ.தி.மு.க. கொடிக்கம்பம் விழுந்து பலியான சுபஸ்ரீயின் பெற்றோர், இன்று (24-9-2020), சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து சட்டரீதியாக இந்தப் பிரச்சினையை வெளிக்கொண்டு வந்து துணை நின்றதற்கு நன்றி தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு 12.9.19 அன்று வேளச்சேரி பகுதியில் அ.தி.மு.க.வினர் திருமண வரவேற்பு நிகழ்வுக்காகச் சாலையின் நடுவே வைத்த பேனர் சரிந்து விழுந்ததில் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர் சுபஸ்ரீ பலியானார். இதற்குக் கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின் சுபஸ்ரீயின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, திமுக சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து சுபஸ்ரீயின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு, சென்னை மாநகராட்சி, காவல் துறை மீது சட்டத்தை முறையாகச் செயல்படுத்தாதது தொடர்பாகவும், நிவாரணம் வழங்கக் கோரியும் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் தற்போது தீர்வு எட்டப்பட்டு 20 லட்ச ரூபாய் சுபஸ்ரீயின் பெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ளது. சுபஸ்ரீ மரணத்தைத் தமிழகம் முழுவதும் வெளிக்கொண்டு வந்து - சட்டரீதியாகத் துணை நின்றதற்கு, சுபஸ்ரீயின் பெற்றோர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்”.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.