

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கொத்தடிமையாக இருந்து ஆடு மேய்த்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை வருவாய்த் துறையினர் மீட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிவாய்க்கால் அருகேயுள்ள கன்னிமாநகரைச் சேர்ந்த கோ.கண்ணன் (55), இவரது மகன்கள் அய்யனார்(25), முனியன்(23) ஆகிய 3 பேரும் புதுக்கோட்டை மாவட்டம் கோங்குடி ஊராட்சி யோகாம்பாள்புரத்தைச் சேர்ந்த சேகரின் ஆடுகளை கடந்த சில ஆண்டுகளாக மேய்த்து வந்துள்ள னர்.
இந்நிலையில் கொத்தடிமையாக இருந்து ஆடு மேய்த்து வரும் தனது குடும்பத்தினரை மீட்டுத் தருமாறு கண்ணனின் மனைவி சரோஜா திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவின் அடிப்படையில் புதுக்கோட்டை ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து அறந் தாங்கி வருவாய்க் கோட்டாட்சியர் ரம்யாதேவி, வட்டாட்சியர் முருகேசன் உள்ளிட்டோர் அறந் தாங்கி பகுதியில் ஆடு மேய்த்து வந்த கண்ணன், அய்யனார், முனியன் ஆகிய 3 பேரையும் நேற்று முன்தினம் இரவு மீட்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி யர் சு.கணேஷ், மீட்கப்பட்ட மூவருக் கும் நேற்று விடுதலைச் சான்று கொடுத்து திருவண்ணாமலைக்கு அனுப்பி வைத்தார்.