Published : 24 Sep 2020 11:23 AM
Last Updated : 24 Sep 2020 11:23 AM

சட்டப்பேரவைக்குள் குட்கா விவகாரம்; உரிமைக்குழு நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை : உயர் நீதிமன்றம் உத்தரவு

பேரவைக்குள் குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்எல்ஏ.-க்களுக்கு அனுப்பபட்ட நோட்டீஸுக்கு இடைக்காலத்தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2017-ல் சட்டப்பேரவைக்குள் குட்கா பொருட்களை கொண்டுவந்த விவகாரத்தில் உரிமைக்குழு இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ.-க்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் திமுக தலைவர் ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் வாதத்தில், ”குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களை இடமாற்றம், பதுக்கல், விற்பனை தொடர்பாகத்தான் தடை இருந்தது. வெளியில் கிடைப்பதை அரசு கவனத்திற்கு கொண்டு வரவே பேரவைக்கு எடுத்து வந்து காண்பித்தனர்.

2017-ல் அனுப்பிய நோட்டிஸில் அடிப்படை தவறு இருப்பதாக கூறி அதை ரத்து செய்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. குட்கா வைத்திருந்தால் அது குற்றமா இல்லையா என்பது நீதிமன்றத்தில் முடிவெடுக்க வேண்டிய விவகாரம் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே விவகாரத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்”. எனத்தெரிவித்தார்.

திமுக எம்எல்ஏ-க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதத்தில், “ போதைப்பொருள் வணிகத்திற்குதான் தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர பேச்சு சுதந்திரத்திற்கு தடை விதிக்கவில்லை. அதனடிப்படையில் தான் குட்கா கிடைப்பது குறித்த பிரச்சினையை பேரவையில் எழுப்பப்பட்டது. உள்நோக்குடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது”. எனத்தெரிவித்தார்.

திமுக எம்எல்ஏ-க்கள் தரப்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞர் அமீத் ஆனந்த் திவாரி வாதத்தில், “ஏற்கெனவே ஒரு பக்க சார்புடன் நடவடிக்கை எடுத்த அதே குழுதான் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பேரவை விதி 228ஐ மீறும் வகையில் மீண்டும் குழு அமைக்கப்பட்டு, குட்கா விவகாரத்தில் அனுப்பப்பட்டுள்ளது. திமுக மீது முழுக்க அதிருப்தியில் உள்ளா துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வமும் குழுவில் இருக்கிறார்”.என வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த பேரவை செயலாளர் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் வாதத்தில், “ஸ்டாலினுக்கு எதிராக மட்டுமே உரிமைக்குழு தலைவரான பொள்ளாச்சி ஜெயராமன் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதனால் 18 பேருக்கும் எதிரான மனப்பான்மையுடன் உரிமைக்குழு இருப்பதாக கூறுவது தவறு. குழுவின் முன் இவர்கள் ஆஜராகவில்லை.

அங்கு வழக்கறிஞர்கள் ஆஜராகி செப்டம்பர் 24 வரை அவகாசம் பெற்றுள்ளனர். பேரவை விதி 226ன் அடிப்படையில் உரிமை மீறல் என பேரவை தலைவர் தானாக முன்வந்து உரிமைக்குழுவுக்கு பரிந்துரைக்கலாம். பேரவையில் நடந்தவற்றின் வீடியோ பதிவுகளை முழுமையாக பார்த்த பிறகுதான் ஸ்டாலின் உள்ளிட்ட 21 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

குட்கா பாக்கெட்டை காண்பித்ததை பேரவை தலைவர் அனுமதிக்க முடியாது என பலமுறை கூறியுள்ளார். அதனால் இது உரிமை மீறல்தான். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எதிர்க்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் கண்ணை உருட்டி, நாக்கை துறுத்தியதையும் உரிமை மீறலாக கருதி 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டது. பேரவை தலைவருக்கு பரிந்துரை மட்டுமே செய்யும். பேரவை தலைவர் தான் முடிவெடுப்பார்.

இன்றோ நாளையோ அடுத்த வாரமோ பேரவை கூடப்போவதில்லை. எனவே தடை விதிக்க வேண்டாம். விரைவில் பதில் மனுத்தாக்கல் செய்கிறோம். விளக்கம் அளிக்க விருப்பப்பட்டால் திமுக எம்எல்ஏ-க்கள் அவகாசம் கேட்கட்டும். எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்குகிறோம்”. எனத்தெரிவித்தார்.

வழக்கில் உத்தரவிட்ட நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, “ஆகஸ்ட் 25-ல் தீர்ப்பளித்தவுடன், செப்டம்பர் 7-ல் உரிமைக்குழு விரைந்து கூடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குட்காவை காண்பிக்க கூடாது என அரசாணையில் இல்லை . மனுதாரர்கள் காண்பிக்கதான் எடுத்து வந்தார்கள் என்பதை தலைமை நீதிபதி உத்தரவிலும் தெளிவுபடுத்தி உள்ளது. நாளை (செப்.24) காலை 10:30ல்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும்”. என உத்தரவிட்டார்.

இந்நிலையில் வழக்கில் இன்று உத்தரவிட்ட நீதிபதி, “பேரவை உரிமைக்குழு நோட்டீசுக்கு இடைக்காலத் தடை, பேரவைக்குள் குட்கா விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.-க்களுக்கு அனுப்பபட்ட நோட்டீஸுக்கு இடைக்காலத்தடை, மறு உத்தரவு வரும் வரை தடை அமலில் இருக்கும். பேரவை தலைவர், செயலாளர், உரிமைக்குழு, உரிமைக்குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் பதிலளிக்க வேண்டும், மறு உத்தரவு வரும் வரை தடை அமலில் இருக்கும் என உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x