குறுவை அறுவடை முடியும் வரை அரசு நெல் கொள்முதல் செய்ய வேண்டும்; ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

குறுவை அறுவடை முடியும் வரை அரசு நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன்.இன்று (செப்.24) வெளியிட்ட அறிக்கை:

"காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடை இந்த ஆண்டு முன் கூட்டியே தொடங்கி நடந்துகொண்டு இருக்கிறது. தமிழக அரசு கொள்முதல் மையங்கள் மூலம் அனைத்து இடங்களிலும் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

மழை காரணமாக ஈரப்பதம் உள்ள நெல்லை, அதிகாரிகள் திருப்பி அனுப்பாமல், அனைத்து இடங்களிலும் கொள்முதல் செய்ய வேண்டும். இம்மாதம் இறுதிக்குள் குறுவை நெல் கொள்முதல் செய்வதை அரசு முடித்துக் கொள்ள இருப்பதாக வந்த தகவலால், விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.

அரசு கொள்முதல் செய்வதை நிறுத்திக் கொண்டால் விவசாயிகள் தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்படும். இதனால் விவசாயிகளுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்படும். ஆகவே, விவசாயிகளின் நலன் கருதி குறுவை அறுவடை முழுமையாக முடியும் வரை அரசே தொடர்;ந்து கொள்முதல் செய்ய வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் உள்ள சிறு, குறு விவசாயிகள் குறுவை நெல்லை இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாத்து வைத்துக்கொள்ள தேவையான வசதிகள் இல்லாததால் உடனடியாக அரசு கொள்முதல் செய்ய வேண்டும். மேலும், அதிகமான கொள்முதல் மையங்கள் திறந்து அரசு ஆவண செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in